படப்பிடிப்பின்போது திடீர் விபத்து.. பிரபல நடிகருக்கு அறுவைச் சிகிச்சை.. 2 வாரம் ரெஸ்ட்!
சென்னை: ஷூட்டிங்கில் ஏற்பட்ட காயத்தை அடுத்து, நடிகர் கருணாகரனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கருணாகரன். இந்த படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்திருந்தனர்.
இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து பீட்ஸா, சூதுகவ்வும், ஜிகிர்தண்டா, லிங்கா, இருமுகன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள கருணாகரன், இப்போது சிம்புவின் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன்
வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' படங்களைத் தயாரித்தவர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

காலிக்
எஸ்.ஏ.சந்திரசேகரன், பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் உள்பட பலர் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார், சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீம் பார்க் ஒன்றில், செட் அமைத்து நடந்தது. அங்கு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிம்புவுடன், கல்யாணி, அஞ்சனா கீர்த்தி, பிரேம்ஜி, கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நடிகர் கருணாகரன்
அவர்களுடன் இருநூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களும் பங்கேற்றனர். இந்த ஷூட்டிங்கின் போது நடிகர் கருணாகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை அவர் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது அதன் பாதிப்பு அதிகரித்ததால், மருத்துவர்களிடம் ஆலோசித்தார். அவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளுமாறு கூறினர்.

அறுவைச் சிகிச்சை
இதையடுத்து அவருக்கு காலில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அவர் விரைவாகக் குணமாகி வருகிறார். இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதை அடுத்து தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஏற்கனவே கொரோனாவால் படப்பிடிப்புகள் இல்லை. தியேட்டர்களும் திறக்கப்படவில்லை. அடுத்த மாதம் அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











