எளிய மக்களின் குரல்.. கலைஞர் கருணாநிதியின் சாகாவரம் பெற்ற வசனங்கள்
சென்னை: கலைஞர் மு. கருணாநிதி. இது வெறும் பெயர் மட்டும்தானா? தமிழ்நாட்டின் திசை வழிப்போக்கினைத் தீர்மானித்த கலங்கரை விளக்கம் எனக் கூறும் அளவிற்கு அவரது அரசியல் வாழ்க்கை அமைந்துள்ளது. ஆனால் அவர் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் பாய்ச்சலில் ஈடுபட பெரும் காரணமாக இருந்தது அவரது கலையுலக அதாவது திரையுலக வாழ்வு. இன்றைக்கு நடிகரை, இயக்குநரை மையப்படுத்தி படங்கள் பார்க்கும் பழக்க வழக்கம் இருக்கின்றது என்றால், அன்றைக்கு ஒரு படத்தின் கதை, வசனம் கருணாநிதி என இருந்தால் அதற்காகவே சினிமா கொட்டகைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இப்படியான கலைஞர் கருணாநிதி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்தார்.
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, மறைந்து இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் அவர் கதை வசனம் எழுதிய படங்களில் பலரது கவனத்தை ஈர்த்த வசனங்கள் குறித்து இங்கு காணலாம். கலைஞர் கருணாநிதி என்றாலே பெரும்பாலானவர்கள் கூறுவது பராசக்தி படத்தில் எழுதிய வசனம் குறித்தாகத்தான் இருக்கும். "இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான். கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக" என்ற வசனங்கள் இன்றைக்கும் கல்லூரிகளில் வகுப்புகளாக அமைந்து வருகின்றது.

முப்பால்: மந்திரி குமாரி படத்தில் இடம் பெற்றுள்ள, "சுதந்திரமாக திரியும் சூரியன் காற்றுப்பட்டு கரையும் மேகத்திடம் மன்னிப்புக் கேட்பதா?" என்ற வசனம் திமுக தொடங்குவதற்கு முன்னரே எழுதிவிட்டார். பின்னாளில் திமுக தொடங்கப்பட்டு அதன் சின்னமாக உதய சூரியன் சின்னம் உருவாக்கப்பட்டது. அதேபோல், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் படத்தில், "துப்பாக்கி முனை - உடலைத்தான் துளைக்கும். உள்ளத்தை தொட முடியாது" என்ற வசனமும், அதே படத்தில் மற்றொரு காட்சியில், "உனக்குப் பால்தானே வேண்டும்? அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலும் உள்ளது. நன்றாகக்குடி" என்று வசனம் எழுதி இருப்பார். அவர் குறிப்பிட்டுள்ள முப்பால் என திருக்குறளை குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மொழி: கண்ணம்மா என்ற படத்தில், "நாட்டில் தமிழ்மொழி, ஆட்சிமொழியானதும், உனக்குத் தமிழிலேயே கடிதம் எழுதுகிறேன்" என்ற வசனம் இருக்கும். இந்த வசனத்தின் மூலம், தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இல்லை; தமிழ் மொழி ஆட்சிமொழியாகும் போது உனக்கு கடிதம் எழுதுகின்றேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. மேலும் தமிழ்நாட்டிலேயே தமிழ் மொழி ஆட்சி மொழியாக இல்லாமல் போனதற்கு யர் காரணம் என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பிவிடுகின்றது.

சாகாவரம் பெற்றவை: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஒரு படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் என்றாலே, அந்தப் படத்தில் எளிய மக்களின் குரலாக வரும் காட்சிகளில் மிகவும் காட்டமாக சமரசமின்றி வசங்கள் எழுதி, அதிகார வர்க்கங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையிலேயே எழுதியுள்ளார். அந்த வகையில் அவரது வசனங்கள் சாகாவரம் பெற்ற வசனங்கள் எனக் கூறலாம்.



Click it and Unblock the Notifications











