Karuppu Day 7 Box Office - கருப்பு 7வது நாள் வசூல் என்ன தெரியுமா?.. ஒரு வார பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர்
சென்னை: சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி வெளியானது. திரிஷா ஹீரோயினாக நடிக்க; சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்துக்கு ரசிகர்களிடையே சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் சூழலில்; வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் ஒரு வாரத்தில் அந்தப் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சூர்யாவுக்கு உடனடியாக ஒரு தியேட்டரிக்கல் ஹிட் தேவைப்பட்டது. அதற்காக பல படங்களில் நடித்தாலும் கடந்த பல வருடங்களாகவே அவரால் அந்த வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்க கமிட்டானார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். ஜென் ஸி தலைமுறையின் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் சூப்பர் ஹிட்: 14ஆம் தேதி வெளியாகவிருந்த படம் சில பிரச்னைகளால் ஒருநாள் தாமதமாகி 15ஆம் தேதி ரிலீஸானது. முதல் நாளே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கிவிட்டன. சூர்யாவின் நடிப்பு, பாலாஜியின் மேக்கிங், சாயின் இசை என பல விஷயங்கள் சரியான மீட்டரில் ஒத்து போனதால் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. முக்கியமாக குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இப்படம் மாறியிருப்பது ஆரோக்கியமான ஒன்றே. குழந்தைகளுக்கு தேவையான விஷயமும் படத்தில் இருப்பதால் அவர்களது கூட்டமும் நன்றாகவே இருக்கிறது.
சூர்யா ரசிகர்கள் உற்சாகம்: கருப்பு வெற்றியில் சூர்யாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இப்படி ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தோம் தெரியுமா?.. ஆர்.ஜே.பாலாஜி தூதுவன் போல் வந்து அந்த வெற்றியை கொடுத்திருக்கிறார் என கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி சூர்யாவின் குடும்பத்தினரும் அதே மனநிலைமையில்தான் இருக்கிறார்கள். நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும்கூட சமீபத்தில் அளித்த பேட்டியில், "நாங்கள் ரொம்பவே நெகிழ்ச்சியடைந்திருக்கிறோம்.
சூர்யாவின் கவனம்: நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்பதில் சூர்யா எப்போதுமே அதிக கவனம் செலுத்துவார். பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் தொடர்பான எண்களும் முக்கியம் என்றே நினைக்கிறேன். யாரும் இங்கே நஷ்டம் அடைய வரவில்லை" என பேசியிருந்தார். அவர் கூறியபடி கருப்பு படத்தால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நல்ல லாபத்தையே சந்தித்திருக்கிறதாம். இந்நிலையில் ஒரு வாரத்தில் அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
கருப்பு வசூல்: படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்திருக்கிறது. ஏழாவது நாளான நேற்று அப்படம் இந்தியாவில் 8.30 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. ஆகமொத்தம் இந்தியாவில் மட்டும் அப்படம் ஒரு வார முடிவில் 114.05 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.படத்துக்கு செல்லும் கூட்டம் இன்னும் குறையவில்லை என்பதால் மேற்கொண்டு கருப்பு வசூல் வேட்டை ஆடும் என கருதப்படுகிறது. அதேசமயம் உலகளவில் மொத்தம் 200 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டிவிட்டதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
