Karuppu Day 2 Box Office - கருப்பு இரண்டாவது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசு
சென்னை: சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி படத்தை இயக்கியிருந்தார். சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இத்தனை வருடங்களாக சூர்யாவும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த கமர்ஷியல் ஹிட் ஒன்று இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் கருப்பு படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாகவும், திரிஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் திரைப்படம் கருப்பு. ஏற்கனவே பாலாஜி கதை எழுதியிருந்த எல்கேஜி படமும், அவர் இயக்கியிருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும் சூப்பர் ஹிட்டடித்து அவருக்கு நல்ல ரெஸ்பான்ஸை பெற்று கொடுத்தன. எனவே சூர்யாவை வைத்து இயக்கும் கருப்பு படமும் அதே மாதிரியான ஒரு ரிசல்ட்டை பெறும் என்ற நம்பிக்கை அவரிடம் மட்டுமின்றி பல ரசிகர்களிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் ரிலீஸான படம்: கடந்த சில மாதங்களாகவே இந்தப் படம் இப்போது ரிலீஸ் ஆகிவிடும்; அப்போது ரிலீஸ் ஆகிவிடும் என தகவல்கள் வெளியாகி; கடைசியில் பொய் என்று ஆகின. ஒருவழியாக மே 14ஆம் தேதி படத்தின் வெளியீட்டுக்கு நாள் குறித்தார்கள். ஆனால் தயாரிப்பு தரப்புக்கு நிதி நெருக்கடி காரணமாக நேற்று முன்தினம் ரிலீஸானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுக்கு ஏற்பட்ட கடனில் சூர்யா மொத்தம் 30 கோடி ரூபாயை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
சூப்பர் ரெஸ்பான்ஸ்: சூர்யாவுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. எனவே கருப்பு படமாவது தங்களது ஏக்கத்தை தீர்த்து வைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியலாக கொடுத்து; சூர்யாவுக்கு பல வருடங்கள் கழித்து ஹிட் கிடைக்க காரணமாக அமைந்திருக்கிறார். காந்தாரா உள்ளிட்ட படங்களின் வாடை அடிக்கிறது என ரசிகர்கள் சிலர் கூறினாலும்; குடும்பம் குடும்பமாக சென்று அப்படத்தை ரசிகர்கள் ரசித்துவருகிறார்கள் என்பதுதான் உண்மை.
சூர்யாவின் நடிப்பு: அதிலும் சூர்யவின் நடிப்பை எக்கச்சக்கமாக கொண்டாடுகிறார்கள். மாஸ் சீன்களில் கமர்ஷியல் ஹீரோவுக்குரிய மிடுக்கு, வழக்கறிஞராக பாடி லாங்குவேஜை மாற்றியது என அத்தனை ஏரியாக்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். இவர் தவிர்த்து திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரும் சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் படத்துக்கு இன்னொரு பலம் என்றால் அது சாய் அபயங்கர்தான். முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைப்பாளராக கமிட்டானார். அவர் விலகி இவர் உள்ளே வந்தார். எனவே இசைப்புயலின் இடத்தை நிரப்பிவிடுவாரா என்ற சந்தேகமே அதிகம் இருந்தது.
வசூல் நிலவரம்: அந்த சந்தேகத்தை எல்லாம் சாய் தனது இசை மூலம் தீர்த்து விட்டார். விமர்சன ரீதியாக படம் 90 விழுக்காடு பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் வசூலில் படத்தின் நிலைமை என்னவென்பது குறித்து Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் அந்தப் படம் 16.66 கோடி ரூபாயை இந்தியாவில் வசூலித்ததாம்.
இரண்டாவது நாளான நேற்று அப்படம் இந்தியாவில் மட்டும் 23.40 கோடி ரூபாயை வசூலித்து மொத்தம் 40 கோடி ரூபாய்க்கும் மேல் இரண்டு நாட்களில் வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்திருக்கிறது. மேலும் உலக அளவிலும் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மொத்தமாக இதுவரை 66 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும் அந்த தளம் கூறுகிறது. கண்டிப்பாக கூடிய விரைவில் 100 கோடி ரூபாய் வசூலையும் படம் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
