கனவுல வந்த கருப்பன்.. புக் பண்ணுடா டிக்கெட்டை.. 217 பேர் குடும்பமாக படம் பார்த்து அசத்தல்
சென்னை: சூர்யா, த்ரிஷா, நட்ராஜ், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான படம் கருப்பு. படத்தை ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கியது மட்டும் இல்லாமல், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கையில் திருச்செந்தூர் அருகே திரையரங்கில் கருப்பு திரைப்படம் பார்ப்பது போல கனவு வந்ததால், ஒரு காட்சி முழுவதையும் புக் செய்து, குடும்பம் மற்றும் உறவினர்கள் 217 பேருடன் வந்து படம் பார்த்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிடைத்த வெற்றிப் படமாக கருப்பு படம் உள்ளது. படம் முதல் மூன்று நாளில் ரூபாய் 147 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இது மட்டும் இல்லாமல் படம் வெளியாகி மே 19ஆம் தேதியுடன் ஐந்து நாட்கள் ஆவதால் இந்த ஐந்து நாட்களில் ரூபாய் 160 முதல் 175 கோடிகள் வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

217 பேர்: இப்படி இருக்கையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே, உள்ள தங்கம் டாக்கீஸ் தியேட்டரில் கருப்பு படத்தை பார்ப்பது போல கனவு வந்ததால், மொத்த குடும்பத்தையும் அழைத்துக் கொண்டும், உறவினர்களை அழைத்துக் கொண்டும் 217 பேர் கருப்பு படத்தை தியேட்டரில் புக் செய்து ஒரே காட்சியில் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தாலும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நெகிழ்ச்சி: படம் பார்த்தவர்களில் ஒருவர் கூறுகையில், இந்த கலியுகத்தில் இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார்கள், அதற்கே பாராட்டுக்கள். கனவில் வந்ததை நிஜத்தில் நடத்திக் காட்ட வேண்டும் என்று வந்துவிட்டோம். குடும்பங்களுடன் உறவுகளுடனும் அமர்ந்து இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீரே வந்துவிட்டது. எல்லைச் சாமி கருப்பு படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இது போன்ற படங்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும்" என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications