அட்டகத்தி தினேஷின் கருப்பு பல்சர்.. உயிரை வாங்குறாங்க.. ப்ளூ சட்டை மாறன் இப்படி விளாசிட்டாரே
சென்னை: அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான தினேஷ் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மிக திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான அவர் இப்போது முரளி கிருஷ்ணா இயக்கத்தில் கருப்பு பல்சர் படத்தில் நடித்துள்ளார். நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இப்படம் குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தினேஷ். ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் எல்லாம் சின்ன சின்ன ரோல்களை செய்துகொண்டிருந்த அவரை; பா.இரஞ்சித் தான் இயக்கிய முதல் படமான அட்டகத்தி படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார். இரண்டு பேருக்குமே அப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தினேஷின் நடிப்பு அப்படத்தில் அவ்வளவு எதார்த்தமாக இருந்தது. இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.
வெற்றிமாறன் இயக்கத்தில்: அட்டகத்தி படத்துக்கு பிறகு ஒருநாள் கூத்து, திருடன் போலீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை படத்தில் நடித்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் தினேஷ் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. முக்கியமாக உயிரை கொடுத்து நடித்திருந்த தினேஷுக்கும் பாராட்டுக்களும் குவிந்தன. இதற்கிடையே குக்கூ திரைப்படத்திலும் அவரது நடிப்பு பிரமிக்க வைத்தது.

சூப்பர் நடிகர்: ஏற்கனவே திறமை வாய்ந்தவர் என்று பெயர் எடுத்த அவரை இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை படைப்பாளிகளுக்கு அப்படம் உணர்த்தியது. அதன் பலனாக லப்பர் பந்து, ஜெ பேபி, தண்டகாரண்யம் என பல படங்களில் நடித்து அசத்தினார். இவற்றில் லப்பர் பந்து படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதுவரை அட்டகத்தி தினேஷாக இருந்த அவருக்கு கெத்து தினேஷ் என்ற பெயரையும் பெற்றுக்கொடுத்தது அப்படம்.
கருப்பு பல்சர்: இப்போது அவர் முரளி கிருஷ்ணா இயக்கத்தில் கருப்பு பல்சர் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் கலையரசன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் இப்படம் தொடர்பான விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் அந்த வீடியோவில், "படத்தின் ஆரம்பத்திலேயே இது பேய் படம் என்பது மாதிரி ஆரம்பிக்கிறார்கள். நகைச்சுவை என்கிற பெயரில் உயிரை எடுக்கிறார்கள். இவர்கள் படுத்துவது போல் அந்த பல்சரும் ஏன் அமானுஷ்யமான வேலைகளை செய்து அது வேறு உயிரை எடுக்கிறது. கதைக்குள் வருவதற்கே இடைவேளை ஆகிவிடுகிறது. முதல் பாதியில் வாங்கிய அடியையே தாங்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் சொல்லும் கதையை ஏற்றுக்கொள்வதற்கு உடம்பு சப்போர்ட் செய்யவில்லை. இது மாதிரி ஹாலிவுட்டில் ஆயிரம் படங்களை எடுத்துவிட்டார்கள். இதை மொக்கையான காதல் படம் என்பதா? மொக்கையான பேய் படம் என்பதா?மொக்கை காமெடி படம் என்பதா? என்ன மாதிரியான மொக்கை படம் என சொல்ல முடியாத அளவுக்கு ஒரு மொக்கை படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











