சூர்யாவின் கருப்பு ரிலீஸ் எப்போது?.. முடிவுக்கு வந்தது சஸ்பென்ஸ்.. ஆர்.ஜே.பாலாஜியே சொல்லிட்டாரு
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கருப்பு. முதன்முறையாக பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது. இப்போதைய சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
கங்குவா படத்தில் எதிர்பார்க்காத அடியை வாங்கினார் சூர்யா. பெரிய ஹைப் ஏற்றப்பட்டு புஸ்வானமானது படம். அதிலிருந்து மெல்ல மீண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்தார். சிவா இயக்கிய படத்தால் ஏற்பட்ட மோசமான விஷயங்களை ரெட்ரோ சரிக்கட்டும் என்று நம்பியிருந்தார். எப்போதும் க்ளாஸிக்காகவும், கமர்ஷியல் டச்சோடும் படம் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த முறை ஏனோ தெரியவில்லை பயங்கரமாகவே சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் பலர் கூறினார்கள்.
ஆர்.ஜே.பாலாஜியுடன் கருப்பு: அதேசமயம் இது அவ்வளவு ஒன்றும் மோசமில்லை; கங்குவா படத்தை ஒப்பிடுகையில் இது எவ்வளவோ பரவாயில்லை என சூர்யா ரசிகர்கள் மனதை தேற்றிக்கொண்டார்கள். ஆனாலும் சூர்யா ஒரு தரமான ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இப்போது ஒரு அவசியமான ஹிட் தேவைப்படுகிறது.இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜியின் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.

படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு: பாலாஜி ஏற்கனவே இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. சூர்யாவிடம் சொன்ன கதை நன்றாக இருக்கிறது என்றும்; இப்படத்தின் மீது சூர்யாவுக்கு ரொம்பவே நம்பிக்கை இருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் கூறுகிறார்கள். சூர்யாவை தாண்டி ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது ஆவல்தான் இருக்கிறது. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
சாய் அபயங்கர் இசை: இதற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற; சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் உள்ளே வந்தார். சமீபத்தில்கூட அவர், 'கருப்பு படம் பார்த்துவிட்டேன். காத்திருப்பதற்கு வொர்த்தான பட்ம்' என்று ட்வீட் செய்து மேற்கொண்டு எதிர்பார்ப்பை பற்ற வைத்திருந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்வி நீண்ட நாட்களாக இருந்தது.
எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், "கருப்பு படம் பற்றி ஓவர் ஹைப் ஏற்ற விரும்பவில்லை. ஏனெனில் நாம் ஒன்று சொல்லி அது வேறு மாதிரியாக புரிந்துகொள்ளப்படுகிறது. மேலும் சரியாக இல்லாவிட்டால் ரொம்பவே அடிக்கிறார்கள். கருப்பு படம் இந்த வருட கோடை விடுமுறைக்கு தேர்தலுக்கு பிறகு வரும்" என்றார்.


Click it and Unblock the Notifications











