விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. விஜய் சாரு தர்மத்திற்காக போராடுகிறார்.. கரூரில் நெகிழ்ந்த பெண்கள்!
கரூர்: கரூரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாகக் கரூர் மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பெண்கள் வருகை தந்திருந்தனர். மேடையில் முதல்வர் விஜய் ஆற்றிய மாஸ் பேச்சு குறித்து பேசி உள்ளனர்.
நேர்ல பார்க்குறேன்: நான் இதுவரை விஜய் சாரை நேரில் பார்த்ததே இல்லை, இப்போதுதான் முதன்முறையாக அவரைப் பார்க்கிறேன். கடந்த முறை அவர் கரூருக்கு வந்திருந்தபோது என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. அப்போது பயங்கரக் கூட்டமாக இருந்ததால், வீட்டில் என்னை வெளியே போகவிடவில்லை. ஆனால், இன்று முதலமைச்சர் விஜய் சாரை மிக அருகில் நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் பிரமாதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன. நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் விஜய் சார் மக்களுக்குப் பல நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார். பொதுவாக அரசியல் என்று வந்துவிட்டாலே விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால், அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் வேலையைச் சரியாகப் பார்க்க வேண்டும் என்றார்.

மரியாதை கூடிடுச்சு: மற்றொரு பெண், ஏற்கனவே கரூரில் கடந்த ஆண்டு மீட்டிங் நடந்தபோது என்னால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய அப்பா மட்டும்தான் வந்திருந்தார். அப்போது இங்கு நடந்த துயரமான சம்பவங்கள் மற்றும் எல்லா விஷயங்களையும் என் அப்பா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். கரூரில் அப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்த நிலையில், அதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக முதல்வர் விஜய் இன்று இவ்வளவு பெரிய அரசு நிகழ்ச்சியை நடத்துவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு முதலமைச்சர் யோசிப்பதே பெரிய விஷயம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணையாக நின்று, அவர்களுக்கு அரசு வேலை வழங்குவது மிகவும் பெருமையாக உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் விஜயின் தீவிர ரசிகைதான். ஆனால், அவர் முதலமைச்சரான பிறகு அவர் மீதான மரியாதையும், நன்மதிப்பும் எனக்குள் இன்னும் அதிகரித்துவிட்டது. முன்பை விட இப்போது எனக்கு விஜய் சாரை அதிகமாகப் பிடித்திருக்கிறது" எனப் பெருமிதத்துடன் கூறினார்.
தர்மம் ஜெயிக்கும்: முந்தைய கூட்டத்திலும் கலந்துகொண்ட காயத்ரி என்ற பெண்மணி, கரூரில் முந்தைய நடந்த சம்பவத்தின் போதும் நான் கூட்டத்திற்கு வந்திருந்தேன். இப்போது இந்த கூட்டத்திற்கும் வந்திருக்கிறேன். மேடையில் இன்றைய பேச்சு அல்டிமேட். அவருடைய 55 நாள் ஆட்சி குறித்துப் பலவிதமான விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் வைக்கப்பட்டு வருகின்றன. நம் வீட்டிலேயே நாலு பேர் இருக்கும்போது அதில் இரண்டு பேர் நல்லவர்களாகவும், ஒருவர் கெட்டவராகவும் இருப்பார். ஒரு சிறிய குடும்பத்தை நடத்தும் போதே விமர்சனங்கள் வரும்போது, இவ்வளவு பெரிய தமிழ்நாட்டை ஆளும் அவருக்கு நிறைய விமர்சனங்கள் வரத்தான் செய்யும். ஆனால், எல்லா விமர்சனங்களையும் அவர் தைரியமாக எதிர்கொள்வார். நியாயம், தர்மம் என இந்த நியாயம் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்பதற்கான வேலைகளை முதல்வர் விஜய் கரெக்டாகச் செய்துகொண்டிருக்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications