திரைப்படமாகிறது நாட்டையே அதிர வைத்த பொள்ளாச்சி சம்பவம்.. மும்தாஜ் தயாரிக்கிறார்!
சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகிறது.
தமிழ்நாட்டையே ஒட்டுமொத்தமாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சியில் நடந்த தொடர் பாலியல் பலாத்கார சம்பவங்கள். கடந்த பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் ஒரு மாணவியின் புகார் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அந்த கொடூரங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பேஸ்புக் மூலம் பெண்களை மடக்கி, அவர்களை பாலியல் ரீதியாக கொடுமை செய்த கொடூர அரக்கர்களை அடையாளம் காட்டிய புகார் அது.

இதுதொடர்பாக பல வீடியோக்கள் வெளியாகி, சில முக்கிய பிரமுகர்களை சிக்க வைத்தது. அதிகார பலம் படைத்த சில பண முதலைகளின் பிடியில் சிக்கி இளம்பெண்கள் பலர் சித்ரவதை அனுபவித்த அந்த வீடியோக்களை பார்த்து நாடே கலங்கியது.
அந்த கொடூரர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்க வேண்டும் எனும் கருத்து வலுபெற்றது. ஆனால் இன்றளவும் இந்த வழக்கில் யார் முக்கிய குற்றவாளி எனும் முடிவுக்கே வரமுடியாத தொய்வு நிலை தான் நீடிக்கிறது.
நாட்டில் எந்த பரபரப்பான சம்பவங்கள் நடந்தாலும் அதை திரைப்படமாக எடுத்து விடுவது நம் மக்களின் பழக்கம். அந்தவகையில் தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த பொள்ளாச்சி சம்பவமும் திரைப்படமாக உருவாகிறது. 'கருத்துகளை பதிவு செய்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ராகுல் பரம்சா என்பவர் இயக்குகிறார். எஸ்.எஸ்.எஸ்.ஆர்யன் நாயகனாகவும், உபா சனா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கின்றனர்.
ஆர்பிஎச் சினிமாஸ் சார்பில் மும்தாஜ் இந்த படத்தை தயாரிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார், பின்னணி இசைக்கு பொறுப்பேற்றுள்ளார் பரணி.
இப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராகுல் பரம்சா, " இந்த படத்தை எடுத்தால் எனக்கு மிரட்டல் வரும் என்று என் நண்பர்கள் தெரிவித்தார்கள். ஆனால் சமூகத்திற்கு நல்ல படம் தர வேண்டும் என்ற நோக்கில் இந்த படத்தை நான் எடுத்துள்ளேன். மேலும் பேஸ்புக்கில் உள்ள அனைத்து பெண்களும் இப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்", என்றார்.


Click it and Unblock the Notifications











