திரில்லர் படத்தில் இணையும் கதிர் ஆனந்தி ஜோடி..முக்கிய கதாபாத்திரத்தில் நரேன்!
சென்னை : சமீப காலமாகவே திரில்லர் படங்கள் வெளியாவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் இப்பொழுது பிரபல இளம் நடிகர்கள் கதிர் மற்றும் ஆனந்தி மீண்டும் இணைந்து நடிக்கும் புதியத் திரைப்படம் திரில்லர் கதையில் உருவாக உள்ளது.
ஏற்கனவே பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இணைந்த இந்த ஜோடி, இப்பொழுது இரண்டாம் முறையாக இணையும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியிருக்கிறது.
ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடிய இந்த க்யூட் ஜோடி இப்பொழுது மீண்டும் இணைய உள்ள நிலையில் இதைப்பற்றிய தகவல்கள் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு
சென்ற 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப் படத்தை அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்க, அதை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் சொந்த தயாரிப்பு நிறுவனமான நீலம் புரோடக்ஷன் மூலம் தயாரித்திருந்தார். சமூகத்தில் இன்றளவும் நடந்து வரும் அவலங்களை தோலுரித்துக் காட்டியது இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

கலக்கலான காமெடி
மேலும் இதில் கதிர் மற்றும் ஆனந்தி தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க, அதில் கதிர் சிறந்த நடிகராக சென்ற ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தொடர்ந்து கதிர் நடித்த பிகில்,ஜடா, சத்ரு உள்ளிட்ட திரைப்படங்கள் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு உருவாகி இருந்த நிலையில் இப்பொழுது சர்பத் என்ற கலக்கலான காமெடி திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

த்ரில்லர் கதையில்
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிறகு கதிர் மற்றும் ஆனந்தி எந்த ஒரு திரைப்படத்திலும் இணையாத நிலையில் இப்பொழுது அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் த்ரில்லர் கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருவரும் வேறு வேறு
அறிமுக இயக்குனர் ஜாக் ஹர்ரிஷ் இயக்கும் திரைப்படத்தில் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு சுவாரசியமான த்ரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கும் திரைப்படத்தில் கதிர் மற்றும் ஆனந்தி இருவரும் வேறு வேறு கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக
அதேபோல இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நரேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே நரேன் கைதி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தி இருந்த நிலையில் இந்த திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் பேசப்படும் என பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











