»   »  கத்துக்குட்டி வெற்றி... கொண்டாட்டத்தில் படக்குழு!

கத்துக்குட்டி வெற்றி... கொண்டாட்டத்தில் படக்குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவான 'கத்துக்குட்டி' படம் கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுக்க வெளியானது. பெரிய அளவிலான விளம்பரங்களோ பரபரப்போ இல்லாமல் வெளியானாலும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் நாளுக்கு நாள் தியேட்டர் வரவேற்பு மிகுதியாகி, தற்போது 242 திரையரங்குகளில் 'கத்துக்குட்டி' படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

Kaththukkutti team celebrates the success

நூறு சதவிகித காமெடி படமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழிக்கப்போகும் மீத்தேன் கொடூரத்தை மக்களுக்குச் சரியாகப் புரிய வைத்ததால் படத்துக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவும் பலமாகக் கிடைத்திருக்கிறது. தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாய சங்க நிர்வாகிகளும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் 'கத்துக்குட்டி' படத்துக்கு பெரிய அளவிலான மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தனர். தஞ்சையில் விவசாய சங்க நிர்வாகிகள் படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

Kaththukkutti team celebrates the success

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன் என்கிற விவசாயி, ''எங்களின் வாழ்க்கையையும் வலியையும் நெஞ்சைப் பிழிகிற அளவுக்கு கத்துக்குட்டி படம் பதிவு செய்திருக்கிறது. படம் முழுக்க நகைச்சுவையும் யதார்த்தமும் நிரம்பி வழிந்தாலும், விவசாயிகளின் சோகங்களை நெஞ்சில் ஆணியடிக்கும் விதமாக இந்தப் படம் விளக்கி இருக்கிறது. எங்களின் மண்ணின் அழுத்தமான பதிவாக உருவாகி இருக்கும் கத்துக்குட்டி படத்தை தமிழக மக்கள் அனைவரும் பெரும் ஆதரவு கொடுத்து கொண்டாட வேண்டும். செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் விதமாக நகர மக்களும் படித்தவர்களும் கத்துக்குட்டி படத்துக்கு மகத்தான ஆதரவை வழங்க வேண்டும். இந்தப் படத்தின் வெற்றி விவசாய ஜீவன்களுக்கான வெற்றி," என சிலிர்ப்பாகச் சொல்லி, படம் பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்பு கொடுத்து வரவேற்றார்.

Kaththukkutti team celebrates the success

படம் வெளியான நான்காவது நாளில் மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதை 'கத்துக்குட்டி' படத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அப்படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குநரும் தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்களின் அபரிவிதமான ஆதரவால் மேலும் திரையரங்குகள் அதிகமாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Kaththukkutti team celebrates the success

நல்ல கருத்துக்களைச் சொன்னால் அத்தகைய படங்கள் வசூல் அள்ளாது என்கிற கடந்த காலக் கணக்குகளை உடைத்து, வசூலிலும் வரவேற்பிலும் சாதனை படைத்து வருகிறது 'கத்துக்குட்டி' படம்.

இந்த வெற்றியை நேற்று கேக் வெட்டிக் கொண்டாடியது இயக்குநர் சரவணன் உள்ளிட்ட படக்குழு.

English summary
Director Era Saravanan and his team has celebrated the success of Kaththukkutty movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil