ஜெயிலர் வெற்றி..குழந்தைகள் இதயத்தில் நிரந்தரமான ரஜினி.. ஆபரேஷனுக்கு 1 கோடி வழங்கிய காவேரி மாறன்!
சென்னை: ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து கலாநிதி மாறனின் மனைவி காவேரி 100 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பு இருந்த அனைத்து சர்ச்சைக்கும் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி சரியான பதிலடி கொடுத்துவிட்டார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிலர் பிளாக் பஸ்டர் ஹிட்: சிலை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், முத்தவேல்பாண்டியன் என்கிற திகார் ஜெயில் ஜெயிலராக நடித்திருந்தார். படம் வெளியான முதல் வாரத்திலேயே தயாரிப்பு நிறுவனம் 375 வசூல் ஆனதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் நிச்சயம்700 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் வாரத்தில் 525 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
BMW X7 கார்: ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் கலாநிதிமாறன், ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து காசோலை கொடுத்து பாராட்டினார். மேலும் பரிசாக இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினிகாந்த்திடம் காட்டி ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுமாறு கூற, BMW X7 மாடல் காரை ரஜினி தேர்வு செய்தார்.
Porsche கார் பரிசு: ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கும் காசோலை வழங்கி Porsche கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்த கலாநிதி மாறன், ஜெயிலர் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக அவருக்கு காசோலை வழங்கி Porsche காரை பரிசாக வழங்கினார். மேலும், படக்குழுவினருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பரிசு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதயத்தில் இடம்பிடித்த ரஜினி: இந்நிலையில், கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டியிடம் வழங்கியுள்ளார். இவரின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜெயிலர் வெற்றியால் ரஜினிகாந்த் குழந்தைகள் இதயத்தில் நிரந்தரமான இடத்தை பிடித்துவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











