என் வாழ்வில், கவிதை படிக்கும் போதும் பாடல் கேட்கும்போதும் மட்டுமே உள்ளம் உயிர் கொண்டதுபோலிருக்கும். திரைப்பாடல்கள் கேட்கும் பொழுது பாடலின் பொருளையும், புதுப்புது வார்த்தைக் கையாடல்களையும் எண்ணி வியப்புடன் பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லித் திரிந்த என்னை மயக்குறச் செய்த கற்பனை, வார்த்தைப் பயன்பாடு, எளிமை எனப் பல்வேறு வகையிலும் தனிப்பெரும் ஆளுமையாய் இருந்தவர் கவிஞர். நா.முத்துக்குமார்.
புகழின் உச்சத்தில் இருந்த கவிஞரின் அறிமுகமும், அருகாமையும் கிடைக்கச் செய்த டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம், ஒன் இந்தியா சங்கர் இவர்களுக்கு மிகப்பெரும் நன்றி. அவரது கவிதைகளைப் போலவே எளிமையான, எதார்த்தமான மனிதர். இயல்பாக மட்டுமே வாழத் தெரிந்த, வாழ முடியாது போனவர். அவரைப் பார்க்கும்போது எழுந்த எண்ணங்கள் பழகியபின் மாறிப்போனது.
உடல்நிலை சரியில்லாது வந்ததால் தோற்ற நிலை வேறுமாதிரியான விமர்சனங்களுக்கு அவரை உள்ளாக்கியது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்று படித்திருந்தும் அதை மறந்ததால் நானும் குற்றவாளியாகிறேன்.
மிகப்பெரும் விழாவாக அமைந்த சித்திரைத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த கவிஞரை நேரமின்மை காரணமாக விரைவில் முடித்துக் கொள்ளச் சொன்னதற்காக அதிகப்படியான திட்டுகள் வாங்கிய பெருமையும் எனக்குத்தான். மீண்டும் அவர் பேச வரமாட்டார் என்று தெரிந்திருந்தால் தடுக்காமல் இருந்திருப்பேனோ என்னவோ?
அவரது வெற்றிக்குக் காரணம் இன்றுவரை சிறந்த படிப்பாளி என்பதுதான். படித்த நூல்களைக் கூடப் புதிதாகப் படிப்பதுபோல் திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் கண்டு வியந்தேன். தமிழ்ப் படைப்புலகம் பாரதி தொடங்கி இவரைப் போன்ற மகா கவிகளை இழந்து கொண்டே இருப்பது பெரும் சாபம்.
கவிதை உலகில் அவர் திறக்காமல் சென்ற பாதிக்கதவும், அவரது வார்த்தைகளுக்காகக் கவியுலக முன்றிலும் காத்துக்கிடக்கின்றன.
- முனைவர். சித்ரா மகேஷ், யு.எஸ்.ஏ.
(இன்று கவிஞர் நா முத்துக்குமார் முதலாண்டு நினைவு நாள்)
குறிப்பு: கட்டுரையாளர் அமெரிக்காவில் உள்ள டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர்
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.