ஜெயிலர் பாணியை கையில் எடுத்திருக்கும் நெல்சன் திலீப்குமார்?.. கவினுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?
சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருந்தார் கவின். படமானது கடந்த மே மாதம் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் கவின் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. படத்துக்கு கலவையான விமர்சனங்களையே ரசிகர்கள் கொடுத்தார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.
ஸ்டார்: டாடா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்தார் கவின். கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் ஸ்டார் திரைப்படம் வெளியானது. பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இளன் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்ததால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது.
கலவையான் விமர்சனம்: ரசிகர்களுக்கு ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்பை படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று ஒருதரப்பினர் கூறினாலும்; மறுதரப்பினர் படத்தில் கவினின் நடிப்பு அட்டகாசமாக இருக்கிறது. படத்தின் திரைக்கதையும் அவ்வளவும் ஒன்றும் மொக்கை இல்லை என்று கூறி தங்களது பாசிட்டிவ் ரிவ்யூவை கொடுத்தனர். ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை; பழைய காலத்து கதையை வைத்து சொதப்பியிருக்கிறார் இயக்குநர் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.
பிளெடி பெக்கர்: ஸ்டார் படத்தின் தோல்வியை கண்டிப்பாக கவின் எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். எனவே அடுத்த படத்தில் எப்படியாவது பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அந்தவகையில் தனக்கு நெருக்கமான நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் பிளெடி பெக்கர் படத்தில் நடிக்கிறார் கவின். அந்தப் படத்தை சிவபாலன் முத்துக்குமார் இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
ரிலீஸ் தேதி: படத்தின் ப்ரோமோ வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிளெடி பெக்கர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதி ரிலீஸாகவிருப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தை இயக்கி பயங்கரமான விமர்சனங்களை சந்தித்த நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்தப் படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ஆ,ம் தேதி ரிலீஸானது. இதன் காரணமாக தான் தயாரிக்கும் முதல் படத்தையும் ஆகஸ்ட் மாதம் வெளியிட்டால் ஜெயிலர் படம் போல் மெகா ஹிட்டடிக்கும் என்ற செண்ட்டிமெண்ட்டில்தான் இந்த முடிவை நெல்சன் எடுத்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











