Blue Star - ப்ளூ ஸ்டார் படத்தில் நடிக்கவிருந்தது முதலில் அவர்தான்.. இயக்குநர் சொன்ன சீக்ரெட்
சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் ப்ளூ ஸ்டார். சாந்தனு, அசோக் செல்வன், பிருத்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் அந்தப் படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கிறார்கள்.
தமிழில் முக்கியமான சினிமாக்களை இயக்குபவர் பா.இரஞ்சித். இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மின்னிக்கொண்டிருக்கும் அவர் பலரை இயக்குநர்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை என புது புது இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் ப்ளூ ஸ்டார் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் சாந்தனு, அசோக் செல்வன், பிருத்வி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

நல்ல ரெஸ்பான்ஸ்: படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. ஊர் மற்றும் சேரி ஆகிய இரண்டு பகுதிகளின் கிரிக்கெட் டீமை வைத்தும்; அந்த இரண்டு டீம்களும் சேர்ந்து செயல்பட்டால் சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் மையமாக வைத்தும் திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது ஏகோபித்த ஆதரவுகளை கொடுத்துவருகின்றனர். இப்படத்துக்கு போட்டியாக களமிறங்கிய சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தைவிட ப்ளூ ஸ்டார் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
எமோஷனல் ஆன சாந்தனு: முக்கியமாக இந்தப் படம் சாந்தனுக்கு நல்ல திருப்புமுனையை பெற்றுக்கொடுத்திருக்கிறது. பல வருடங்களாக ஒரு வெற்றிக்கு போராடிக்கொண்டிருந்த அவர் இந்தப் படத்தின் மூலம் அதனை சுவைத்திருக்கிறார். நேற்று நடந்த படத்தின் சக்சஸ் மீட்டில்கூட இதுகுறித்து எமோஷனலாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அசோக் செல்வனுக்கும் இப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது. அவரும் நேற்று, எனது எண்ட்ரியின்போது இந்தப் படத்தில்தான் கைத்தட்டல் விழுந்தது என்று கூறியிருந்தார்.
இயக்குநர் பேட்டி: இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் சமீபத்தில் படம் குறித்து ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "முதலில் இப்படத்தில் கவின் நடிப்பதாக இருந்தது. படத்தின் கதையை கேட்டதுமே அவருக்கு பிடித்துவிட்டது. சில தயாரிப்பாளர்களையும் பார்க்க சொன்னார். ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாகிவிட்டார். அதனால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகுதான் கவினுக்கு பதிலாக அசோக் செல்வன் கமிட்டானார்" என்றார்.

கவினின் அடுத்த படம்: கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் கடைசியாக நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாக உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது. தற்போது அவர் ஸ்டார் என்ற படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











