‘உள்ளொழுக்கு’ என் தூக்கத்தைத் துரத்திவிட்டது… மலையாள படத்தை பாராட்டிய வைரமுத்து!
சென்னை: கடந்த மாதம் தியேட்டரில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய மலையாளத் திரைப்படமான உள்ளொழுக்கு படத்தை பார்த்து கவிபேரசு வைரமுத்து வெகுவாக பாராட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் சிலாகித்து கவிதை வெளியீட்டுள்ளார்.
கேரளாவை உலுக்கிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'Curry & Cyanide: The Jolly Joseph Case' என்ற ஆவணப்படம் அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றது. இதனை இயக்கிய கிறிஸ்டோ டோமியின் அடுத்த படம் 'உள்ளொழுக்கு'. இதில் பார்வதி, ஊர்வசி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

உள்ளொழுக்கு: பெற்றோர்களின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத கட்டாய திருமணத்துக்கு ஆளாக்கப்படுகிறார் அஞ்சு பார்வதி திருவோத்து. மணமுடித்த சில நாட்களில் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை அஞ்சுவும் மாமியார் லீலாம்மா (ஊர்வசி) மகனை பார்த்துக்கொள்கின்றனர். எந்தவித மகிழ்ச்சியுமில்லாமல் நகரும் நாட்களில், அஞ்சுவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவரது காதலன் ராஜீவ் (அர்ஜூன்). இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசிவதன் விளைவாக அஞ்சு கர்ப்பம் தரிக்கிறார். மறுபுறம் கணவன் தாமஸ் குட்டியின் உடல்நிலை மோசமடைந்து அவர் உயிரிழந்து விடுகிறான்.
உணர்வுபூர்வமான கதை: இந்த திருப்பங்களுடன் சேர்ந்து அஞ்சு - லீலாம்மாவுக்கு இடையே பனிப்போர் மூள்கிறது. அதற்கு என்ன காரணம்? அவர்களுக்குள் படிந்திருக்கும் ரகசியம் என்ன என்பது தான் படத்தின் கதை. 19 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு நிர்பந்திக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்ட லீலாம்மா, விரும்பத்துக்கு மாறான மணவாழ்க்கையில் சிக்கி தவிக்கும் அஞ்சு ஆகிய இரு பெண்களின் வழியே தலைமுறை தலைமுறையாக நிகழ்த்தப்படும் கட்டாய மணமுடிப்புகளை அழுத்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கிறிஸ்டோ டாமி.

கவிபேரரசு வைரமுத்து: பலரின் பாராட்டை பெற்ற இந்த படத்தை பார்த்த கவி பேரரசு வைரமுத்து பாராட்டி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் சிலாய்த்து கவிதை வெளியிட்டுள்ளார்.
ஒரு மலையாளப்
படம் பார்த்தேன்
'உள்ளொழுக்கு'
மிச்ச இரவு
என் தூக்கத்தைத்
துரத்திவிட்டது
வெற்றாரவாரங்களும்
தொழில்நுட்பத் துயரங்களும்
சூழக் கிடக்கும்
சினிமாச் சிரமங்களுக்கு மத்தியில்
ஒப்பனை செய்யாத
உண்மை ஓவியம்
வாழ்வின் காயத்திலிருந்து
வழியும் சூடான ரத்தம்
தாலி அறுக்குமுன்பே
தடம் மாறிய மருமகளுக்கும்
அவளுக்குத் தாயாகிப்போன
மாமியாருக்குமிடையே
நிலவும் உணர்ச்சியொழுக்கு
"கலை உலகில்
அறிந்த வரையில்
அறிவார்ந்த பெண்கள்
இருவர்" என்றார் கமல்
" யார்? யார்?" என்றேன்
" ஒருவர் ஊர்வசி;
இன்னொருவர்
கோவை சரளா"
அந்த ஊர்வசி
அறிவைத் தன்
கட்டுப்பாட்டில் கட்டிவைத்துவிட்டு
உணர்ச்சிக்குத்
தேவையான அளவு
உப்பிட்டு நடித்த படம்
பார்வதி என்ற பெண்ணை
இப்போது தான் பார்க்கிறேன்.
வாழ்வு வலி இரண்டையும்
எடுத்து உடுத்து நடித்திருக்கிறார்
படத்தின் முடிவில்
கேரளம் தண்ணீரில்;
நாம் கண்ணீரில்
இயக்குனரை வாழ்த்துகிறேன்
இப்படி ஒரு படம்
நடிகர்களுக்கு
மீண்டும் வாய்க்காது;
நமக்கும்தான் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











