Vairamuthu:7 தேசிய விருதுகள்! 4 உலக அழகிகள்! பிறந்த நாளில் வைரமுத்து குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள்
சென்னை: தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் தொதிரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்து குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆச்சரியமூட்டும் வார்த்தைகள்: வைரமுத்து என்றாலே, தான் எழுதும் திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர் எனக் கூறும் அளவிற்கு ரசிகர்களை ஆச்சரியமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பாடல் எழுதியவர். குறிப்பாக பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிகள், தீயின் தாகம், ஆனந்த தாகம், ராஜ மேகங்கள், அழகான ராட்சசி, 50 கே.ஜி. தாஜ்மஹால், அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, ரோஜாத் தீவுகள், பொன் வானம், ஜீவசொந்தம், சேலைப் பூக்கள, ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை என பலவற்றைக் குறிப்பிடலாம்.

அஞ்சலி செலுத்த ஒலிக்கப்பட்ட பாடல்: இவர் எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூர் அதிபராயிருந்த தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் மறைவின்போது உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியிருந்த அரங்கில் எஸ்.ஆர். நாதன் உடல் வைக்கப்பட்டு அந்தப் பாடலை முழுதும் ஒலிபரப்பி அஞ்சலி செய்தது சிங்கப்பூர் அரசாங்கம். இந்த காணொலி இன்றைக்கும் இணையத்தில் உலா வருகின்றது.

8 நிமிடத்தில்: பாட்ஷா படத்தில் இடம்பெற்ற 'எட்டுக்குள்ள மனுஷன் இருக்கான் ராமய்யா புத்திக்கு எட்டும்படி சொல்லப் போறேன் கேளய்யா' என்ற பாடலை வைரமுத்து 8 நிமிடத்திற்குள் எழுதி முடித்தார் எனவும் மிகக் குறைந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல் இது கூறப்படுகின்றது. சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் வைரமுத்து: கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாடு பாடநூல் மட்டும் இல்லாமல் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாக இடம் பெறும் அளவிற்கு கருத்து செறிந்ததாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், சிங்கப்பூர் அரசின் கல்வித் திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பாடுவேன் என்ற கவிதை தமிழ் பாடமாக இடம் பெற்றுள்ளது. இவர் எழுதிய 'சின்னச் சின்ன ஆசை' பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்றைக்கும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது எனவும் அதில் இடம் பெற்றுள்ள வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை என்ற வரி கற்பனையின் உச்சமாகும் என்றும் ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் வைரமுத்துவை பல இடங்களில் பாராட்டியுள்ளார்.

7 தேசிய விருது: இந்தியாவின் சிறந்த பாடலா சிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும் இவர் 6 முறை பெற்றிருக்கிறார். ஒரு தனியார் அமைப்பு, கனடா அரசாங்கத்தோடு இணைந்து, கவிப்பேரரசு வைரமுத்துவின் தபால் தலையை டொரண்டோவில் வெளியிட்டுச் அவருக்கு புகழ் சூட்டியுள்ளது. இவரது இலக்கிய பணிகளுக்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவை கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன.
4 உலக அழகிகள்: இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகள் பெற்ற ஒரே தமிழ்க் கவிஞராகத் கவிப்பேரரசு வைரமுத்து உள்ளார். புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய மூன்றாம் உலகப்போர், மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று தேந்தெடுக்கப்பட்டது மட்டும் இல்லாமல் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு பெற்றது. ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென். பிரியங்கா சோப்ரா, யுக்தாமுகி ஆகிய 4 உலக அழகிகளுக்குப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

நீளமான பாடல்: தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' என்ற பாடல் கருதப்படுகிறது. இளையராஜா இசையமைப்பில் நிழல்கள் தொடங்கி புன்னகை மன்னன் வரை சுமார் 250 பாடல்கள்களை எழுதியிருக்கிறார்.ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் வைரமுத்துவால் எழுதப்பட்டவை. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு,கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இந்திய இசையமைப்பாளர்களின் இசைக்கு தமிழ்ப் பாடல்களை எழுதி அசத்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஒருசில படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











