வெற்றி மாறன் இப்படியெல்லாம் வேலை வாங்கினாரா?.. விடுதலை 2க்கு சப்டைட்டில் எழுதிய பெண் எழுத்தாளர் ஓபன்!

சென்னை: இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கென், தமிழ், சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விடுதலை பாகம் 2. இது ஏற்கனவே வெளியான பாகம் ஒன்றின் நீட்சி. பாகம் இரண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்நிலையில், படத்திற்கு ஆங்கிலத்தில் subtitles பணிகளை செய்த கவிதா ராஜேந்திரன் தனது அனுபவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், " விடுதலை 2 படத்திற்கு subtitles எழுதும் வாய்ப்பை இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு அளித்திருந்தார். முன்னதாக அவரது தயாரிப்பில், கோபி நயினார் இயக்கிய மனுஷி படத்திற்கு சப்டைட்டில் முடித்திருந்தேன். கடந்த 2023 டிசம்பர் மாதம் விடுதலை திரைப்படத்திற்கு சப்டைட்டில் வேலைகளை துவங்கினேன். ஓராண்டு காலம் போன இப்பயணத்தில், விடுதலை 2 subtitle வேலை என்பது ஓர் அரசியல் செயல்பாடாக மாறுமளவு பெரும் அனுபவமாக அமைந்துவிட்டது.

vijay sethupathi viduthalai part 2 vetri maaran 2

மார்க்சிய கண்ணோட்டத்துடன், சாதிய முறை, பண்ணை அடிமை முறை, வர்க்கப் போராட்ட தொழிற்சங்க வாழ்வியல், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவை குறித்துப் பேசும் வசனங்களை, சரியானப் புரிதல் மற்றும் வாக்கியக் கோர்வையுடனும் எழுத வேண்டியிருந்தது. அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு நூல்களையும் படிக்க வாய்ப்பை உருவாக்கி தந்தது.

மொழிபெயர்ப்பு: சில வசனங்களை துல்லியமாக வெளிப்படுத்தும் ஆங்கில வார்த்தைகளை தேடுவதும், அச்சொல் தமிழில் வெளிப்படுத்தும் அரசியல் கருத்துக்கு நிகரானதாக இருக்கிறதா என பொருத்திப் பார்ப்பதும் சவாலாகவே அமைந்தது. தோழர் வெற்றிமாறனின் வசன வாக்கியங்கள் உணர்ச்சியை கடத்துவதாக மட்டுமல்லாமல், அரசியல் ஆழத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒரு நாள் காலை படப்பிடிப்பிற்கு முன் மார்க்சின் கூலி உழைப்பும் மூலதனமும் - Wage Labour and Capital - கட்டுரையில் Labour - Power பற்றிய குறிப்பிற்கு தமிழ் மொழிபெயர்ப்பு வேண்டும் என படக்குழுவில் இருந்து கேட்டிருந்தனர். மார்க்சின் உழைப்பு சக்தி (Labour-Power) பற்றி விவரிக்கும் கட்டுரை ஒன்று இணையதளத்தில் கிடைத்தது. இதனால் மீண்டும் உழைப்பு சக்தி பற்றிய வாசிப்புக்குள் நான் சென்றேன்.

vijay sethupathi viduthalai part 2 vetri maaran 2

தோழர் தமிழரசன்: இதேபோல அழித்தொழிப்பு, தேசிய இன உரிமை, தேசிய சுயநிர்ணயம், மொழி வழி தேசியம், சந்தை, சந்தைப் பொருள், லாபம், வளங்கள், நீர்வள மேம்பாடு, சுரண்டல், வர்க்கம், கோட்பாடு, சித்தாந்தம் என இடது அரசியல் மொழிநடையில் கொண்ட வசனங்கள் திரைப்படம் முழுவதும் படர்ந்து இருந்தது. அவை ஒவ்வொன்றுக்குமான தேடல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூல்கள், மா-லே இயக்க நூல்கள், தோழர் தமிழரசன் பற்றிய நூல்கள் மார்க்சிய அரசியல் புத்தகங்கள், தரவுகள், வலைதளங்கள் போன்றவற்றை தேடிக் கண்டடைந்து, வாசிக்கவும் வைத்தது.

கட்சி அறிக்கை: ஒரு கட்டத்தில், இது திரைப்படத்திற்கான வேலையா அல்லது கட்சி அறிக்கை எழுதுகிறேனா என்று யோசிக்க வைத்தது. இதனாலேயே விடுதலை பட வேலை, அதிக நேர உழைப்பை கோரியது. விடுதலை 2 திரைப்படம் மூன்று தலைமுறையின் விடுதலை போராட்டத்தை முன் வைப்பதாகவே நான் பார்க்கிறேன். திரைக்கதை சாதிய ஆதிக்கம் மற்றும் பண்ணை அடிமைத்தனத்தை எதிர்ப்பதில் துவங்கி, தொழிற்சங்க போராட்ட சிக்கல்களுக்கு வந்தடைந்து, தற்கால அரசியல் உரையாடலின் முக்கியப் புள்ளியான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையில் நேர்த்தியாக வேரூன்றி நிற்பதாக அமைந்திருக்கிறது.

பலமுறை: இத்திரைப்படத்தை உருவாக்க போதுமான வாசிப்புடனும் எழுத்துக்களுடனும் தோழர் வெற்றிமாறன் இருந்திருக்கிறார். வசனங்கள் இந்த ஒரு வருடத்தில் பலமுறை திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு, மாற்றப்பட்டு, மெருகேறியதை ஒவ்வொரு நாளும் அறிய எனக்கு வாய்ப்பிருந்தது. டிசம்பர் 20ம் தேதி திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முதல்நாள் வரை திருத்தங்கள், காட்சி மாற்றங்களை செய்துகொண்டே இருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.

ஆயுதம்: 'ரோட்டர்டாம்' எனும் உலக புகழ்பெற்ற நெதர்லாந்து திரைப்பட விழாவிற்கு, ஓராண்டிற்கு முன் அவர் அனுப்பிய விடுதலை படத்தின் சுருக்கப்பட்ட வடிவத்தையே நான் டிசம்பர் 20-ல் திரையில் கண்டேன். நேரம் கருதியோ, சென்சாரின் நெருக்கடி கருதியோ நீக்கப்பட்ட காட்சிகள் அரசியல் அர்த்தம் பொதிந்த ஆழமான காட்சிப்படைப்புகள். 'மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆயுதம் ஓட்டாக இருக்கலாம்' எனும் வசனத்தை முதன்முதலாக டிச-18ல் (திரைப்படம் வெளியாக இருந்த இரு நாட்கள் முன்பு)தான் நான் மொழிபெயர்க்க வேண்டி வந்தது.

சிறந்த தத்துவம்: படத்தில் எனக்கு பிடித்த வசனங்கள் நிறைய இருந்தாலும், "நம்மிடம் சிறந்த தத்துவம் இருக்கிறது," எனும் வசனம் மறக்க இயலாதது. மார்க்சியத்தை வாசிக்காமல் உள்வாங்காமல் தோழர் வெற்றிமாறன் இந்த வசனத்தை வைத்திருக்க முடியாது. கடந்த ஓராண்டு ஓய்வு எனக்கு அதிக வாசிப்பிற்கான வாய்ப்பாக அமைந்தது. அதற்கு தோழர் வெற்றிமாறனின் விடுதலையே முக்கிய காரணம். வாசிப்பில்லாதவர்களால் விடுதலை திரைப்படத்தையும், மார்க்சியத்தையும் புரிந்துகொள்ள முடியாது என்பதே என் அனுபவம். அஞ்சுவதில்லை மக்கள் படை செஞ்சமர் செய்கின்றோம்! வெல்வதை ஒன்றே சிந்தித்தே முன் அடி வைக்கிறோம்! தப்பை அழித்திடும் தத்துவம் வெல்லட்டும்! தோழர் வெற்றிமாறனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்"எனக் குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X