Keerthy Suresh Salary - மாமன்னன் கொடுத்த உற்சாகம்.. சம்பளத்தை ஏற்றிய கீர்த்தி சுரேஷ்?
சென்னை: Keerthy Suresh Salary (கீர்த்தி சுரேஷ் சம்பளம்) மாமன்னன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினி உடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியை விட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: அதன்படி நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவர் சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இருந்தாலும் வடிவேலு, ஃபகத் பாசில் என்ற மகா நடிகர்களின் பெர்பார்மன்ஸுக்கு மத்தியில் கீர்த்தியின் நடிப்பு கொஞ்சம் கவனிக்கப்படாமல் போனது.
மாமன்னனில் சம்பளம்: மாமன்னன் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் மாமன்னன் படம் பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை அப்படம் 60 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இனி வரும் படங்களில் தனது சம்பளத்தை ஏற்ற முடிவு செய்திருக்கிறாராம் கீர்த்தி. அதன்படி இரண்டு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷின் சம்பளம் அடுத்த படத்தில் கமிட்டாகும்போது 6 கோடி ரூபாய் வரை செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











