ரவி மோகனும் கெனிஷாவும் சேர்ந்து வைத்த விருந்து.. கலந்து கொண்ட மாதவன், சுதா கொங்கரா, டி. இமான்!
சென்னை: பாடகி கெனிஷா ஃப்ரான்சிஸ் கடந்த சில மாதங்களாகவே பலராலும் கவனிக்கப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார். இவர் தற்போது தனது ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். அன்றும் இன்றும் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆல்பம் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கெனிஷா தனது நலம் விரும்பிகளுக்கு மாலை விருந்து ஒன்று வைத்துள்ளார். இதில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரத்தில் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், இவர்களின் நெருக்கம்தான் விவாகரத்துக்கு காரணம் என்றும் பலரும் பேசத்தொடங்கினார்கள். இது தொடர்பாக ரவி மோகன், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை பேசினார். விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட வாழ்க்கை அது தொடர்பாக பேச வேண்டாம் என்றார். மேலும் கெனிஷாவும் தானும் நல்ல தோழர்கள், எதிர்காலத்தில் ஹீலிங் சென்டர் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார். அதன் பின்னர் சில மாதங்கள் எல்லாம் கப்சிப் என தான் இருந்தது.
நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் மற்றும் கெனிஷா ஒன்றாக பங்கேற்க ஆர்த்தி அதன் பின்னர் வெளியிட்ட அறிக்கை, அதற்கடுத்து ரவி மோகன் வெளியிட்ட அறிக்கை என அனைத்தும் இவர்களின் விவாகரத்து விவகாரத்தை ஊர் முழுவதும் பேசுவதைப் போல் ஆகிவிட்டது. இந்த பேச்சுக்களின் போது கெனிஷாவின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்தது.

ஆர்த்தி - ரவி விவாகரத்து விவகாரம்: இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான கெனிஷா, இந்த விவகாரம் தொடர்பாக என்னை தேவையில்லாமல் கோர்த்து விடுகிறார்கள். எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிரட்டல்கள் விடப்படுகிறது. நான் எங்கும் ஓடி ஒளிய மாட்டேன். தேவைப்பட்டால் நான் நீதிமன்றத்திற்கு வந்து என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் தர தயார் எனவும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் விமர்சித்துக் கொண்டு இருக்காதீர்கள் என்று தெரிவித்தார். மேலும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட பின்னர் இவர்களின் விவாகரத்து விவகாரம் தொடர்பான பேச்சுகள் அடங்கியது. பல யூடியூப் சேனல்கள் ரவி மோகன் ஆர்த்தி தொடர்பான பல வீடியோக்களை டெலிட் செய்தது.
ஸ்பெஷல் விருந்து: இந்நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே தனது ஆல்பம் பாடல் தொடர்பான புரோமோசன் பதிவுகளை பகிர்ந்து வந்தார். பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கெனிஷா தனது நண்பர்கள் வட்டாரத்திற்கு ஸ்பெஷல் விருந்து வைத்துள்ளார்.

திரைப் பிரபலங்கள்: இந்த விருந்தில் நடிகர் ரவி மோகன், மாதவன், இசையமைப்பாளர் டி. இமான், இயக்குநர் சுதா கொங்கரா, சொல்லிசைப் பாடகர் தெருக்குரல் அறிவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான புகைப்படத்தை கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி மோகன் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு தங்களது நலம் விரும்பிகளுக்கு சின்ன விருந்து வைத்தோம் என கேப்ஷனிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











