Aarti - Ravi: நீதிமன்றத்திற்கு நான் வரேன்.. ஆர்த்தி - ரவி மோகன் வழக்கில் ஆஜராகிறாரா கெனிஷா? அதிரடி முடிவா?
சென்னை: ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு அடுத்த கட்டமாக வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி விசாரிக்கப்படும் என குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்குள் ரவி மோகன் தரப்பில் இருந்து, ஆர்த்தி கோரியுள்ள மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் தருவது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவி மோகனின் தோழி கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஆர்த்தி - ரவி மோகன் பிரிவுக்கு காரணமாக பொதுவாக சொல்லப்படுபவர் பாடகி கெனிஷா ஃப்ரான்சிஸ். ஆனால் தனது விவாகரத்து விவகாரத்தில் கெனிஷாவை இழுக்க வேண்டாம் என்று ரவி மோகன் முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் இவர்களின் விவாகரத்து சர்ச்சையில், கெனிஷாவின் பெயர் அடிபடாமல் இல்லை.

இப்படி இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் கெனிஷாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கெனிஷாவின் பெயர் இடம்பெறாமல், அவர்களின் விவாகரத்து குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. போதாகுறைக்கு ஆர்த்தி கடைசியாக வெளியிட்ட அறிக்கையில், எங்களின் விவாகரத்திற்கு முன் எங்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபர் இருந்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் இணையவாசிகள் பலரும் கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வசைச் சொற்கள் உடன் மெசேஜ் செய்து வந்தார்கள். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கெனிஷா தனது எண்ணத்தையும் பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதாவது, " நான் எனது கமெண்ட் செக்ஷனை நிறுத்தி வைக்க மாட்டேன். நான் எங்கேயும் யார் பின்னாலேயும் போய் ஒளிய மாட்டேன். என்னை கேள்வி கேட்பவர்கள் என் முகத்திற்கு நேராக கேள்வி கேளுங்கள் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன். மேலும் எனது தரப்பு நியாயத்தை மக்களிடத்தில் சொல்ல எனக்கு அது சரியான வாய்ப்பாகவும் இருக்கும்.

நீங்கள் சொல்வதைப் போல், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நான் தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதுதான் சரியானதாகவும் இருக்கும். ஊடகங்களில் என்னைப் பற்றி தரக்குறைவாக செய்திகளை பரப்புவதை தவிருங்கள். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண். எது நடந்தாலும் கண்மூடித்தனமாக அதற்கு நான் தான் காரணம் என கூறுவதை நிறுத்துங்கள்.

இந்த பிரச்னை தொடங்கியதில் இருந்தே நான், உருவக்கேலி செய்யப்படுகிறேன், சபிக்கப்படுகிறேன், குற்றம்சாட்டப்படுகிறேன், என் மீது பொய்கள் பரப்படுகிறது, கொலை மிரட்டல்களை எதிர்கொள்கிறேன். கர்மா எனக்கு பதிலடி கொடுக்கும் என கூறுகிறீர்கள். ஆனால் அது உங்கள் யாருக்கும் நடக்க கூடாது என்று நினைக்கிறேன். உண்மை ஒரு நாள் கட்டாயம் வெளியே வரும்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவைப் பார்க்கும் போது ஆர்த்தி - ரவி மோகன் விவாகரத்து வழக்கில் கெனிஷா ஆஜராவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











