பிரபல நடிகை கடத்தித் துன்புறுத்தப்பட்ட வழக்கு... முக்கிய சாட்சியான மஞ்சு வாரியர் வாக்குமூலம்
கொச்சி: பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகை மஞ்சு வாரியர் இன்று நீதிமனறத்தில் வாக்குமூலம் அளித்தார்.
பிரபல மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது.
அந்த நடிகை, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்தவர். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறப்பு விசாரணை
இதில் தொடர்புடையாதாகக் கூறி, நடிகர் திலீப்பை கைது செய்த போலீசார், கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த திலீப், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் சிறப்பு விசாரணை, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

திலீப் மனு தள்ளுபடி
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திலீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 6 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

136 சாட்சிகள்
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்துவருகிறது. இதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் கேரளாவில் சூடு பிடிக்கத் தொடங்கியது. இந்த வழக்கில் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். தினமும் ஒருவர் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

ரகசியமாக
இதனால் இந்த வழக்கை பலரும் அவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் அவர் குடும்பத்தினரும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துவிட்டனர். இந்தச் சாட்சியம் பூட்டிய அறைக்குள் ரகசியமாக நடந்தது. இதையடுத்து, நடிகரும் இயக்குனருமான லால், தனது மனைவி, தாய் மற்றும் மருமகளுடன் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை வாக்குமூலம் அளித்தார்.

முக்கிய சாட்சியாக
இதையடுத்து நடிகை ரம்யா நம்பீசன் தனது சகோதரருடன் சென்று வாக்குமூலம் அளித்தார். பாதிக்கப்பட்ட நடிகையும் ரம்யா நம்பீசனும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் இன்று வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் அவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சித்திக், நடிகை பிந்து பணிக்கர் ஆகியோரும் வாக்குமூலம் அளித்தனர்.


Click it and Unblock the Notifications











