மெல்லிசை மன்னனுக்கு நினைவிடம்... ரூ ஒரு கோடி ஒதுக்கீடு செய்த கேரள அரசு
திருவனந்தபுரம் : காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களுக்கு சொந்தக்காரர் எம்எஸ் விஸ்வநாதன். இசையுலகின் இமயமாக போற்றப்படும் இவர் 50 ஆண்டுகாலம் இசையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தவர். ரசிகர்களால் போற்றப்பட்டவர். கடந்த 2015ல் இவர் காலமானார்.

மெல்லிசை மன்னன்
பாலக்காட்டில் பிறந்தவர் எம்எஸ் விஸ்வநாதன். கோவையில் இசையமைப்பாளர் சுப்பைய்யா நாயுடுவிடம் சிறுவனாக சேர்ந்த இவர், அவரது ஆதரவால் ஆர்மோனியம் வாசிப்பாளர் மற்றும் இசையமைப்பாளராக மாறினார். இந்திப்பட இசையமைப்பாளர் நௌசத்தை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார்.

950 படங்களுக்கு இசை
தன்னுடைய இசைக் காலத்தில் 950 படங்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளார் எம்எஸ்வி. இவரின் அன்பே வா, இருமலர்கள், ஊட்டிவரை உறவு, குடியிருந்த கோயில், தவப்புதல்வன் போன்ற படங்கள் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இன்று வரை சிறப்பான இடத்தை பெற்றவை. இவரின் இசையமைப்பில் இவரது இசை என்றே தெரியாமல் பல படங்கள் காலத்தால் அழியாத பாடல்களாக அமைந்தவை.

20 நிமிடங்களில் இசை
எழுதிக் கொடுக்கப்படும் பாடல், பல்லவி, சரணங்களுக்கு 20 நிமிடங்களில் இசையமைத்து கொடுத்து விடுவாராம் எம்எஸ்வி. கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை படத்திற்கு சிறப்பான 10 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் எம்எஸ்வி. இந்தப் படத்தின் செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடல் காலத்தால் அழியாதது.

பாலக்காட்டில் நினைவிடம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசையமைத்துள்ள எம்எஸ்வி மறைந்த நிலையிலும் இன்றளவும் இந்திய அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான கேரளாவின் பாலக்காட்டில் அவருக்கு நினைவிடம் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
Recommended Video

ஒரு கோடி ரூபாய் நிதி
இதுகுறித்து கேரள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இசை அரசனுக்கு மணி மண்டபம் கட்டுவது அவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











