நடிகை கடத்தல் வழக்கு...மொபைல் போன்களை ஒப்படைக்க திலீப்பிற்கு கோர்ட் உத்தரவு
எர்ணாகுளம் : நடிகை கடத்தல் வழக்கில் வரும் திங்கட்கிழமைக்குள் 6 மொபைல் போன்களையும் ஒப்படைக்க வேண்டும் என கேரள ஐகோர்ட் நடிகர் திலீப்பிற்கு உத்தரவிட்டுள்ளது.
2017 ம் ஆண்டு நடிகை காரில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு பிறகு கிரைம் பிராஞ்சிற்கு மாற்றப்பட்டது. இதில் விசாரணை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திலீப் மற்றும் மேலும் 5 பேர் மீது கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

மொபைல்களை ஒப்படைக்க திலீப் மறுப்பு
இந்த வழக்கு தனி நீதிபதி கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் திலீப் தனது பழைய மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும் என கிரைம் பிராஞ்ச் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திலீப் தரப்பில் மொபைல் போனை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திலீப் தரப்பு கோர்ட்டில் முறையிட்டது.

தனி நீதிபதியின் அதிரடி உத்தரவு
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் திங்கட்கிழமை காலை 10.15 மணிக்குள் 6 மொபைல் போன்களையும் ரிஜிஸ்டர் ஜெனரலிடம் திலீப் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். திலீப் மற்றும் மற்ற குற்றவாளிகளின் போன்களை பெற்று சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிரைம் பிராஞ்ச் போலீசிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அடம்பிடிக்கும் திலீப்
மொபைல் போன்களை ஒப்படைக்க கால அவகாசம் கேட்டு திலீப்பு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதோடு திலீப்பின் மொபைல் போன்கள் ஏற்கனவே மும்பையில் உள்ள தனியார் தடயவியல் ஏஜன்சிக்கு அனுப்பப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு விட்டதாகவும் திலீப் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் தனியார் ஏஜன்சி அளிக்கும் ஆதரங்களை ஏற்க முடியாது என கோர்ட் மறுப்பு தெரிவித்து விட்டது.

திலீப் கைது செய்யப்படுவாரா
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் ஏஜன்சி அளிக்கும் ஆய்வறிக்கை மட்டுமே கோர்ட்டால் ஏற்றுக் கொள்ளப்படும் என கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதே சமயம், திலீப் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அவரின் முன்ஜாமினை ரத்து செய்துவிட்டு அவரை கைது செய்வதற்கான இடைக்கால தடையை நீக்க வேண்டும் என கிரைம் பிராஞ்ச் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால் கோர்ட் இந்த கோரிக்கை மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

எத்தனை மொபைல்கள்
திலீப்பிடம் 6 போன்கள் உள்ளதாகவும், அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்றும் கிரைம் பிராஞ்ச் போலீசார் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால் தன்னிடம் இரண்டு ஐபோன்கள் மற்றும் இரண்டு விவோ போன்கள் என மொத்தம் 4 போன்கள் மட்டுமே இருப்பதாக கூறி வருகின்றார்.


Click it and Unblock the Notifications











