twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சார்.. முதல்நாள் முதல் ஷோவுக்கு ரெண்டுபேர்தான் வந்திருக்காங்க.. படத்தை தூக்கிடவா?'

    By Shankar
    |

    சென்னை: புதிய படங்கள் பலவற்றுக்கு தியேட்டர்களில் கூட்டமே இல்லை. முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டு பேர்தான் வந்திருக்கிறார்கள், படத்தை தூக்கிடவா என்று தியேட்டர்காரர்கள் கேட்கும் அளவுக்கு மோசமாகிவிட்டது நிலைமை, என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கூறினார்.

    வேதநாயகி பிலிம்ஸ் தயாரித்துள்ள புதிய படம் 'அலையே அலையே'. புதுமுக இயக்குநர் ஜி.மணிகண்டகுமார் இயக்கியுள்ளார்.

    நாயகனாக 'மானாட மயிலாட'புகழ் ரஞ்சித்தும், நாயகியாக அங்கீதா நயனாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

    Keyaar shares the pathetic show of Tamil cinema today

    இயக்குநர் வி.சி. குகநாதன் தலைமையில், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் டி.சிவா, பொருளாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா முன்னிலையில் வெளியிடப்பட்டது.

    விழாவில் இசையை கேயார் வெளியிட நடிகர் விஜய் சேதுபதியும், இசையமைப்பாளர் டி.இமானும் பெற்றுக்கொண்டனர்.

    கேயார் பேசும் போது, "இன்று இந்தப்பட விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டிருந்திருக்கிறார்.விஜய் சேதுபதி யதார்த்தமான நடிகர். இப்போதுள்ள நடிகர்களில் இயல்பான நடிப்பில் விஜய் சேதுபதியை எனக்குப் பிடிக்கும்.

    இன்று தங்கள் படங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கே நடிகர்கள் வரத் தயங்குகிறார்கள். பல பெரிய நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டுக்கு வருவதில்லை.

    அப்படி இருக்கும் போது இவர் தான் சம்பந்தப்படாத நிகழ்ச்சிகளுக்கும் வந்து கலந்து கொள்வது வாழ்த்துவது பாராட்டுக்குரியது.

    இன்னொரு படத்து ப்ரமோஷனுக்கு வந்திருந்து அவர் பெருந்தன்மையுடன் உதவுவதை வரவேற்க வேண்டும். இதை மற்ற நட்சத்திர நடிகர்களும் பின்பற்ற வேண்டும்.

    இந்த விஷயத்தில் உலக நாயகன் கமல் அவர்களும் இப்படி மற்றவர் படங்களின் ப்ரமோஷனுக்கு வருகிறார்கள்; வாழ்த்துகிறார்கள் சின்னபடம் பெரிய படம் என்று பார்க்காமல் முறையாக அழைப்பு விடுத்தால் கமல் வந்து வாழ்த்துகிறார். அது அந்தப் படத்துக்கு எவ்வளவு பெரிய விளம்பரம் தெரியுமா? இது எவ்வளவு பெரிய உதவி தெரியுமா? அதே போல சகோதரர் சூர்யா அவர்களும் வருவது பாராட்டுக்குரியது.

    இன்று பெரிய நடிகர்கள் நட்சத்திரங்கள் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சிகளை மதிப்பதே இல்லை அதற்கு அவர்களது மேனேஜர்கள் குறுக்கே நிற்கிறார்கள். அவர்கள்கூட இப்படி தவறான வழிகாட்டுகிறார்கள்.

    இன்று நிறைய தொழிலதிபர்கள் சினிமாவுக்கு வருவது வரவேற்கத்தக்கது. ஜெட் ஏர்வேய்ஸில் பைலட்டாக இருப்பவர்கள் கூட சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். டாக்டர்ககள் பலர் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். என்.ஆர்.ஐ வந்திருக்கிறார்கள்., சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எல்லாம் வருகிறார்கள். ஒரு காலத்தில் சினிமா என்றால் கேவலமாக நினைத்தது மாறி இருப்பது மகிழ்ச்சி. அதே நேரம் சென்ற ஆண்டு 164 படங்கள் வந்தன. 200 படங்கள் வெளிவர முடியாமல் கிடக்கின்றன.

    கடந்த நாலைந்து மாதங்களில் தியேட்டர் வசூல் மிக மோசமாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் படத்தை வெளியிட்டார். அந்த தயாரிப்பாளருக்கு வெளியான முதல் நாளே தியேட்டர் மேனேஜர் போன் செய்தார். 'சார் முதல் நாள் முதல் காட்சிக்கு இரண்டே பேர்தான் வந்திருக்கிறார்கள். காட்சியை நிறுத்தட்டுமா ஓட்டட்டுமா' என்றிருக்கிறார்.

    தியேட்டருக்கு போன தயாரிப்பாளரின்' ரெப்' போன் செய்திருக்கிறார். 'தியேட்டரில் படம் பார்க்க ஒரு ஆள் கூட இல்லை' என்று. அப்போது தயாரிப்பாளர் கேட்டாராம் 'இரண்டுபேர் இருப்பதாக இப்போது மேனேஜர் சொன்னாரே' என்று. 'அவர் சொல்லியிருக்கும் அந்த இரண்டு பேர் நாங்கள்தான்' என்றாராம் ரெப். இப்படி இருக்கிறது இன்றைய நிலைமை.

    இப்போது நிறைய படங்கள் வருவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதா என்று தெரியவில்லை. சென்ற ஆண்டு 180பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள். எத்தனைபேர் மேலே வந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை நினைத்து பாராட்டுவதா பயப்படுவதா தெரியவில்லை.

    சேட்டிலைட் சேனல்கள் சின்ன படங்களைக் கண்டு கொள்வதில்லை. சின்ன படங்களை வரவேற்பதில்லை. இன்று இத்தனை சேனல்கள் வந்திருக்கின்றன. வளர்ந்திருக்கின்றன. இவை எல்லாமே சினிமாவைப் பின்னணியாக வைத்துதான் வளர்ந்திருக்கின்றன.

    ஆனால் அவர்கள் சின்ன படங்களை கவனிப்பதில்லை. அவர்கள் எல்லாருமே சிறுபடங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், " இவ்வாறு கேயார் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஜாகுவார் தங்கம், விசி குகநாதன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பேசினார்கள். தயாரிப்பாளர் ஜவகர் பழனியப்பன் நன்றி கூறினார்.

    English summary
    Keyaar says that the box office condition of Tamil cinema going bad to worst nowadays and new films even not running for just one full day in theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X