அம்மாடியோவ்.. 200 மில்லியன் பார்வையாளர்களை.. சாதனை படைத்த கேஜிஎஃப்-2 டீஸர்.. சலாம் ராக்கி பாய்!
சென்னை : கேஜிஎஃப் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
நடிகர் யஷ் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் அதே கம்பீரத்துடன் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.
கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்று வந்த நிலையில் இப்போது யூட்யூப் தளத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்து உள்ளது.

வசூல் சாதனை
சமீபகாலமாகவே இந்தியாவில் பிரம்மாண்ட படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் கன்னடத்தில் உருவான கேஜிஎஃப் திரைப்படம் இந்திய அளவில் அனைத்து மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட படமாக உள்ளது இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் ஹீரோவாக மிரட்டி இருந்த கேஜிஎஃப் கன்னடம், தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையை படைத்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு
கதையின்படி கோலார் தங்கச் சுரங்கத்தை பற்றி எடுக்கப்பட்டிருந்தாலும் இதில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் மாஸான காட்சிகள் அவரையும் பிரமிக்க வைத்தது. அடுத்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வர, யஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன் கூட்டியே கசிந்ததால்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. நடிகர் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப் 2ன் டீஸர் வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக டீஸர் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் கசிந்ததால் முன் கூட்டியே டீஸர் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

மாஸான காட்சிகள்
டீசரில் முதல் பாகத்தை விடவும் பல மாஸான காட்சிகள் ராக்கி பாய்க்கு வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக இறுதியில் பீரங்கியில் சிகரெட் பிடிக்கும் காட்சி லைக்குகளை அள்ளியது. டீஸர் வெளியான சில நிமிடங்களிலேயே பல சாதனைகளை நிகழ்த்தியது. இப்பொழுது கேஜிஎஃப் 2 டீஸர் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

சாதனை படைத்துள்ளது
ஆம் தற்போது கேஜிஎஃப் 2 டீஸர் 200 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்துள்ளது. மேலும் 8. 4 மில்லியன் லைக்குகளும் , 1 மில்லியனுக்கும் மேல் கமெண்ட்டுகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.இப்படி சாதனைக்கு மேல் சாதனை செய்துவரும் கேஜிஎஃப் படக்குழு விரைவிலேயே ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











