ஆள விடுங்கடா சாமி.. சலார் பார்ட் 3 வேற இருக்கா.. கேஜிஎஃப் இயக்குநரின் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!
பெங்களூர் : பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்ற நிலையில், சலார் 3ஆம் பாகம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கன்னட சினிமாவின் எழுச்சி அபரிவிதமாக உள்ளது. அதன் ஆரம்ப புள்ளியாக யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் இருந்தது. அதன்பின் வெளியான கே.ஜி.எஃப் சேப்டர் 2 திரைப்படம் ரூ.1,000 கோடிக்கு அதிக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இதனால் இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக எந்த படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஷாருக்கானுடன் மோதிய பிரபாஸ்: இதனிடையே பிரபாஸ் நடிப்பில் "சலார்" என்ற படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகியது. ஷாரூக்கானின் டங்கி திரைப்படத்துடன் களமிறங்கியும் சலார் படத்தின் வசூல் உச்சத்தில் இருந்தது.
வசூல் வேட்டை: அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலை சலார் திரைப்படம் ஈட்டியது. ஏற்கனவே பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான உக்ரம் படத்தின் ரீமேக் என்றாலும், சலார் திரைப்படத்தில் கான்சர் என்ற புதிய உலகத்தை உருவாக்கி, அதில் இனக்குழுக்களுக்கு இடையிலான மோதலையும், அதில் இரு உயிர் நண்பர்களின் கதையையும் ஒரே புள்ளியில் இணைத்து பிரசாந்த் நீல் திரைக்கதை அமைத்திருந்தார்.
பிரபாஸ் மார்க்கெட்: அதிகளவில் ஸ்லோ மோஷன் காட்சிகள் வைக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் சலார் முதல் பாகம், இரண்டாம் பாகத்திற்கான மோதலுக்கு சரியான செட்டப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பிரபாஸ் கல்கி, ராஜாசாப் மற்றும் ஸ்பிரிட் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். அதன்பின் மீண்டும் சலார் 2ம் பாகத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.
சலார் 3ம் பாகம்: அதற்கான தயாரிப்பு பணிகளில் பிரசாந்த் நீல் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் பிரசாந்த் நீல் மனைவி லித்திகா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். அதில் ரசிகர் ஒருவர் சலார் 3ம் பாகம் வெளி வருமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, சலார் 2ம் பாகமான செளரியங்கா பருவம் படத்தின் முடிவில் அதனை அறிந்து கொள்வீர்கள் என்று பதில் அளித்துள்ளார்.
இதனால் சலார் படத்தின் 3ஆம் பாகத்திற்கான திட்டம் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகத்தின் இறுதியில் கே.ஜி.எஃப் 3ஆம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இதனால் பிரசாந்த் நீல் சலார் 3ஆம் பாகத்திற்கான திட்டத்தையும் வைத்திருப்பது பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











