கேஜிஎப் படங்களை தயாரிச்ச ஹோம்பாலே நிறுவனம்... அடுத்ததாக எந்த டைரக்டரோட இணையுதுன்னு பாருங்க!
சென்னை : நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 இரண்டு பாகங்களையும் தயாரித்துள்ளது ஹோம்பாலே பிலிம்ஸ். இந்த நிறுவனம் கேஜிஎப் 3 பாகத்தின் பணிகளை துவக்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனிடையே அடுத்ததாக முன்னணி இயக்குநரை வைத்து படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜிஎப் 2 படம்
நடிகர் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது கேஜிஎப் 2. இந்தப் படத்தில் மிரட்டலான திரைக்கதை, நடிப்பு உள்ளிட்டவை இருந்தது. படத்தை சிறப்பாக இயக்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு
முன்னதாக கேஜிஎப் படமும் வெளியாகி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாகவே கேஜிஎப் 2 வெளியானது. இரண்டு படங்களும் மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்தப் படங்களை தயாரித்திருந்தது ஹோம்பாலே பிலிம்ஸ்.

யஷ் ஆசை
படம் கன்னடத்தில் உருவாகிய நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் படம் ரிலீசானது. அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனிடையே கன்னட மொழிப் படங்களை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் யஷ் தெரிவித்திருந்தார்.

அடுத்த பாகம் துவக்கம்
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், அடுத்ததாக கேஜிஎப் 3 படத்தின் பணிகளை துவக்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் கேஜிஎப் 3 படம் வெளியாக கண்டிப்பாக 8 ஆண்டுகள் ஆகும் என்று பிரஷாந்த் நீல் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரஷாந்த் நீலின் அடுத்த படம்
தற்போது அவர் பிரபாஸ், ஷ்ருதிஹாசன் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் பிரபாஸ் வன்முறை மிகுந்த காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஹோம்பாலே நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படம் குறித்த அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

சுதா கொங்கராவுடன் ஹோம்பாலே நிறுவனம்
முன்னணி இயக்குநர் சுதா கொங்குராவின் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். தற்போது பாலிவுட்டில் சூரரைப் போற்று படத்தின் ரீமேக் படத்தை சுதா கொங்கரா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று ரீமேக்
இந்தப் படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பூஜை மும்பையில் போடப்பட்டது. அக்ஷய் குமார் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில், அடுத்ததாக சூர்யா -சுதா கொங்கரா இணைந்து 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கூட்டணி
இதனிடையே ஹோம்பாலே நிறுவனத்தின் கீழ் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையவுள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த படங்களில் இந்த கூட்டணி இணையவுள்ளது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி சூரரைப் போற்று என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ள நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் இணையவுள்ளது.


Click it and Unblock the Notifications











