Khushbu: முஸ்லிம் மதத்திலிருந்து மாறினேனா... உங்களுக்கு அதெல்லாம் தெரியாதா..? கொந்தளித்த குஷ்பூ
சென்னை: 1988ல் தர்மத்தின் தலைவன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை குஷ்பூ.
90களில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ, அரசியலிலும் ஒரு ரவுண்டு வருகிறார்.
நடிப்பில் பிஸியாக இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், முஸ்லிமான குஷ்பூ திருமணத்திற்காக மதம் மாறினார் என்ற சர்ச்சைக்கு அவரே டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.
மதம் மாறினாரா குஷ்பூ
நகாத் கான் என்ற இயற்பெயருடைய குஷ்பூ 1988ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். முஸ்லிமான நகாத் கான் சினிமாவுக்காக குஷ்பூ என்ற பெயரில் வலம் வந்ததுடன், அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய வரலாறெல்லாம் நடந்தது. 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ, இயக்குநர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் தற்போது பாஜக என அரசியலில் பிஸியாகிவிட்டார். அதேபோல், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் குஷ்பூ பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் சுந்தர் சி-யை திருமணம் செய்வதற்காக குஷ்பூ மதம் மாறியதாக சொல்லப்பட்டது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாக, நடிகை குஷ்பூ தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து டிவிட் செய்துள்ள குஷ்பூ, என் திருமணத்தை கேள்வி கேட்பவர்கள் அல்லது நான் சுந்தர் சி-யை திருமணம் செய்துகொள்ள மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவுசெய்து கொஞ்சம் அறிவோடு சிந்தியுங்கள். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் இருக்கும் 'சிறப்பு திருமணச் சட்டம்' பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என நினைக்கிறேன். நான் மதம் மாறவும் இல்லை, அவ்வாறு கேட்கவும் இல்லை என்றுள்ளார்.

மேலும், எனது 23 வருட திருமணம் நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் அனைத்தும் அன்பின் அடிப்படையில் உறுதியானது. எனவே சந்தேகம் உள்ளவர்கள் தயவுசெய்து மலையேறவும் என விளக்கம் கொடுத்ததோடு, உங்களுக்கு இது தேவையா எனவும் காட்டமாக கேட்டுள்ளார். குஷ்பூவின் இந்த டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் குஷ்பூ இன்னும் முஸ்லிமாகவே இருப்பதாக தெரிகிறது.
குஷ்பூவின் இந்த பதிவை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதேபோல், நெட்டிசன்கள் வழக்கம் போல குஷ்பூவை ட்ரோல் செய்து வருகின்றனர். அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து ட்ரெண்டிங் ஆகும் குஷ்பூ, தற்போது தனது திருமணம், மதமாற்றம் குறித்து சரவெடியாக வெடித்துள்ளார். கடந்த சில தினங்களாகவே அரசியலில் மிகத் தீவிரமாக இயங்கி வரும் குஷ்பூ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











