தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. தமிழ் சினிமாவை காப்பாத்துங்க.. குஷ்பு !
சென்னை: 2026 - 2029 ஆம் ஆண்டுக்கான தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று (பிப்ரவரி 22ந் தேதி) நடைபெற்று வருகிறது. ஜி.எம் தமிழ்க்குமரன் தலைமையில் ஒரு அணியும், முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இதில், வாக்களிக்க வந்த நடிகை குஷ்பு, தமிழ் திரைப்படத்துறைய காப்பாற்ற வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த வாக்குப்பதிவில் வாக்களிக்க வந்த நடிகை குஷ்பு வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

நடிகை குஷ்பு பேட்டி: அதில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்காக வாக்களிக்க வந்தேன். ஜனநாயக ரீதியாக தேர்தல் நடைபெறுவது மிகவும் முக்கியமான ஒன்று. தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நிறைய தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான், தமிழ் சினிமா நன்றாக இருக்கும். தமிழ் சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்றால் இது போன்ற தேர்தல் நடக்க வேண்டும்.
தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும்: இந்த தேர்தலில் நல்ல அணி வெற்றி பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எப்பொழுதுமே, வாக்களித்த உடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சொல்ல மாட்டோம். இப்போதும் நான் அதை சொல்லப்போவது இல்லை. ஆனால், நல்ல அணி ஜெயிக்க வேண்டும். ஜெயித்த அணி தமிழகத்தில் நம்முடைய சினிமா துறையை பாதுகாக்க வேண்டும். ஜெயிப்பது யாராக இருந்தாலும், தமிழ் சினிமாக்காக உழைக்க வேண்டும், தமிழ் சினிமா நன்றாக இருக்க பாடுபட வேண்டும், தமிழ் சினிமாவில் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக்கூடாது. யாருக்கும் எந்தவிதமான ஃபேவரிசமும் இல்லாமல், நேர்மையாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் மட்டுமே தமிழ் சினிமா நன்றாக இருக்கும் என்றார். இன்று பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு இன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications