ஸ்ரீதேவியை பார்த்து உறைந்து நின்ற கிச்சா சுதீப்.. விஜய் செய்ததுதான் செம ஹைலைட்டே
சென்னை: இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. தமிழில் அவர் தனது திரை பயணத்தை தொடங்கி பாலிவுட்டுக்கு சென்று அங்கு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் கடந்த 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் கிச்சா சுதீப் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீதேவி பிறகு ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என தமிழின் டாப் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்த அவருக்கு இங்கே மார்க்கெட் படு வேகமாக உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கனவு கன்னியாக மாறினார் அவர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தன்னுடைய கொடியை உயர பறக்கவிட்டார்.
பாலிவுட் என்ட்ரி: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவருக்கு பாலிவுட் கதவுகள் திறந்தன. அதனையடுத்து அங்கே சென்ற அவர் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். அதன் காரணமாக அடுத்தடுத்து நடித்துக்கொண்டே இருந்தார். எனவே ஒருகட்டத்தில் கோலிவுட்டை மறந்தேபோனார். பாலிவுட்டுக்கு பறந்து போன மயில் தமிழ் சினிமாவை மறந்துபோனது அப்போதைய இளைஞர்களுக்கு பெருத்த சோகமாகவே இருந்தது.

திருமணம் டூ மரணம்: அங்கே தனக்கென தனியிடத்தை உருவாக்கிக்கொண்ட அவர் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இரண்டு பேருமே திரைத்துறையில்தான் இருக்கிறார்கள். தமிழில் அவர் கடைசியாக புலி படத்தில் நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு குடும்பத்துடன் துபாய்க்கு சென்றிருந்தார் ஸ்ரீதேவி. அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கிச்சா சுதீப் பேட்டி: இந்நிலையில் பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் புலி படத்தில் ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவத்தை சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். அவர் அளித்த பேட்டியில், "புலி படத்தில் வில்லனாக நடிக்க வேண்டுமா என நான் முதலில் தயங்கினேன். நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கேட்டார். எனவே ஒத்துக்கொண்டேன். பிறகு ஷூட்டிங் ஆரம்பித்து நான் நடிக்கும் காட்சிக்காக ஷூட்டிங் ஸ்பாட் சென்றேன். அப்போது ஸ்ரீதேவி வந்துகொண்டிருந்தார். அதுவரை ஸ்ரீதேவி படத்தில் இருக்கிறார் என தெரியாது.
விஜய் செய்தது: நான், விஜய், ஸ்ரீதேவி மூன்று பேரும் இணைந்து நடிக்கும் காட்சி ஷூட் செய்யப்பட்டது. நான் ஸ்ரீதேவியை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில்; பேச வேண்டிய வசனத்தை மறந்துபோய் அப்படியே உறைந்து நின்றேன். அருகில் இருந்த விஜய்யோ, 'ப்ரோ நீங்கள்தான் இப்போது டயலாக் பேச வேண்டும்' என மெதுவாக கூறினார். இரண்டு முறை அவர் அப்படி சொன்னதும்தான் வசனத்தை மறந்து நிற்பது எனக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஸ்ரீதேவியும் என்ன நடக்கிறது என கேட்டார். பிறகு நானோ, 'ஸ்ரீதேவியை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் இப்படி நின்றுவிட்டேன்' என சொல்லி அடுத்த டேக்கில் சரியாக நடித்து முடித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











