கிறிஸ்டோஃபர் நோலனுக்கு ராஜ மரியாதை.. சர் பட்டம் கொடுத்த பிரிட்டன் மன்னர்!
லண்டன்: உலகம் முழுவதும் உள்ள வெறித்தனமான சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களின் வரிசையில் எப்போதுமே, கிறிஸ்டோஃபர் நோலனுக்கு தனி இடம் உண்டு. இவரது சினிமாவின் கதைக்களம் தொடங்கி, திரைக்கதை, படத்தை உருவாக்கும் விதம் என அனைத்துமே சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள பல சினிமா கலைஞர்களுக்கும் பெரிய, ஆச்சரியமான விஷயமாகத்தான் உள்ளது. இவரது படம் ஒரு ஆண்டில் ரிலீஸ் ஆகின்றது, என்றால் அந்தப் படத்தின் பெயரில் சில ஆஸ்கார்களை எழுதி வைத்துவிட வேண்டும் எனும் அளவுக்கு திறமையான இயக்குநர். இவருக்கும் இவரது மனைவி எம்மாவுக்கும் இங்கிலாந்து அரசு, சர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கிறிஸ்டோஃபர் நோலன் கடந்த 1998ஆம் ஆண்டில் இருந்து உலக சினிமாவில் அறியப்பட்ட இயக்குநராக உள்ளார். இவரது இயக்கத்தில் இதுவரை 12 படங்கள் வெளியாகியுள்ளது. சாதாரணக் கதையை எடுத்து மிகவும் பிரமாண்டமாகவும் கதை சொல்லத் தெரியும், பிரமாண்டமான கதையை எடுத்து அதனை சாதாரணமாகவும் சொல்லத் தெரிந்த, மிகவும் அட்டகாசமான இயக்குநர்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஓபன்ஹைமர் படம், 2024ஆம் ஆண்டு ஆஸ்காரில் மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார்களை வென்றது. இதில் இரண்டு ஆஸ்கார்கள் இவருக்கு கொடுக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் திரைத்துறையினருக்கு வழங்கப்படும், கௌரவமான விருதுகள் கிற்ஸ்டோஃபர் நோலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஒரு திரையரங்கில், கிறிஸ்டோஃபர் நோலனின் இரண்டு கை ரேகைகள், காலடித் தடங்கள், மற்றும் அவரது கையெப்பம் ஆகியவை பொக்கிஷம் போல காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

கிறிஸ்டோஃபர் நோலன்: சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல பிரமிப்பூட்டும் அதேநேரத்தில் பல சவாலான படங்களை இயக்கி வரும் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு இங்கிலாந்து அரசு சர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த சர் பட்டம் கிறிஸ்டோஃபர் நோலனின் மனைவி எம்மாவுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்துதான் பல பிரமிப்பூட்டும் படங்களை உருவாக்கியுள்ளனர்.
சர் பட்டம்: இவர்களுக்கு சர் பட்டத்தினை இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ் கடந்த புதன் கிழமை அதாவது, டிசம்பர் 18ஆம் தேதி வழங்கி கௌரவித்தார். இந்த விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது. இந்தப் பட்டம், இங்கிலாந்து மன்னரால், வழங்கப்படும். பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கும், நாட்டுக்காக சேவை செய்யும் பொது மக்களுக்கும் தனி நபர்களுக்கும் இந்த சர் பட்டம் வழங்கப்படும்.

வாழ்த்து: அந்த வகையில் திரைத்துறையில் சிறந்து விளங்கிவரும் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி, பிரிட்டன் அரசு கௌரவித்துள்ளது. சர் பட்டம் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்னால், திரு எனப் பயன்படுத்துவதற்கு பதிலாக சர் என்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சர் பட்டம் என்பது இங்கிலாந்தில் மிகவும் உயரிய பட்டமாக பார்க்கப்படுகின்றது. சர் பட்டம் பெற்ற கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மாவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











