தனது உயிரை கொடுத்து நடிகையின் உயிரை காப்பாற்றிய கிருஷ்ணா.. கண்ணீர்மல்க கதறும் படக்குழு!
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணா கடைசி நேரத்திலும் நடிகை ஒருவரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தை லைகா புரடெக்ஷன் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தப் படத்தின் சில காட்சிகள் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் ஷுட் செய்யப்படுகிறது.

3 பேர் பலி
நேற்று முன்தினம் இரவு ஷுட்டிங் ஸ்பாட்டில் லைட்டுகளுக்கான அமைக்கப்பட்டிருந்த கிரேன் சரிந்து கீழே விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரெடெக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நூலிழையில்
இந்த சம்பவம் தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் ஆகியோர் நூலிழையில் உயிர் பிழைத்தனர். இந்நிலையில் உயிரிழந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

பொறுமைசாலி
இந்நிலையில் கிருஷ்ணா குறித்து அவருடன் இரண்டு நாட்களிலேயே நெருக்கமாக பழகிய படக்குழுவினர் உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர். எப்போதும் சிரித்த முகத்துடன் எல்லோருக்கும் அன்பாக எல்லாவற்றையும் சொல்லிக்கொடுப்பார் என்றும் நல்ல பொறுமைசாலி திறமைசாலி என்றும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

நடிகையை காப்பாற்றிய
அதோடு கிரேன் சரிந்த அந்த கடைசி நிமிடத்தில் கூட அங்கிருந்த துணை நடிகையை கிருஷ்ணா காப்பாற்றினார் என்றும் அவர் தப்பிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்றும் படக்குழுவினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். உயிரிழந்த கிருஷ்ணா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதனின் இரண்டாவது மருமகன் ஆவார்.

இந்தியன் 2
நடிகர் கமல்ஹாசனுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஏற்கனவே ரொம்பவும் நெருக்கமானவர் கிருஷ்ணா. பல விளம்பரப் படங்களை இயக்கியிருக்கும் கிருஷ்ணா, ஷங்கருடன் பணியாற்ற விரும்பி இந்தியன் 2 புராஜெக்டில் இணைந்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்திருக்கிறார்.

2 வயதில் ஆண் குழந்தை
கிருஷ்ணா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புதான் கார்ட்டூனிஸ்ட் மதனின் இளைய மகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கனவே விஸ்வரூபம் படத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











