Ashif Ali: தொட்டதெல்லாம் ஹிட்டுப்பா.. மலையாள சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்.. உச்சி முகரும் ஆசிஃப் அலி
கொச்சி: இந்திய சினிமாக்களிலேயே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுக்கும் திரையுலகமாக இருப்பது மலையாள திரையுலகம் மட்டுமே. இங்கு மற்ற சினிமாக்களைப்போல் யதார்த்தத்தினை மீறி எடுக்கப்படும் படங்களை எளிதில் பட்டியலிட்டுவிட முடியும். இப்படியான மலையாள சினிமாவினை இந்த ஆண்டும் உச்சி முகரவைத்த நடிகர் என்றால் அது ஆசிஃப் அலிதான். இவர் இந்த ஆண்டில் நடித்த படங்கள் அனைத்துமே பாராட்டப்பட்டது. ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாத கதைகளங்கள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியது மட்டும் இல்லாமல், வெற்றிப் படிகட்டிகளில் வேகமாக ஏறிக்கொண்டு உள்ளார். அவர் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மலையாள சினிமா உலகில் இருந்து வரும் ஆசிஃப் கடந்த சில ஆண்டுகளாகத்தான் கவனிக்கத்தகுந்த ஸ்டாராக மாறியுள்ளார். தொடக்கத்தில் இவர் பல படங்களில் துணை நடிகர் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தார். அதேநேரத்தில் தன்னைத் தேடிவந்த கதாநாயக பிம்பத்துவ கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

சுமார் 10 ஆண்டுகள் மலையாள சினிமாவில் கடின உழைப்பை செலுத்திய இவரை சினிமா கைவிடவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் இவர் மலையாள சினிமா ரசிகர்களிடம் பெரும் கவனத்தினைப் பெற்றுள்ளார். அதிலும் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள், அதற்காக இவரது அற்பணிப்பு தென்னிந்திய சினிமாவில் கவனிக்கத்தகுந்த நடிகராக மிளிர வைத்து வருகின்றது.
தொடர் வெற்றி: இந்த ஆண்டில் மட்டும், இவரது நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி, நான்கு படங்களும் பெரும் வெற்றிப் படங்களாக மாறியுள்ளது. தலைக்கணம் கொண்ட காவல் அதிகாரியாக தலைவன், மனநலம் பாதிக்கப்பட்ட கொலைகார ரயில்வே கிராஸ் ஊழியராக லெவல் கிராஸ், ஜாலியான இளைஞனாக எப்போதும் போதையிலேயே இருப்பவராக அடியோஸ் அமிகோ மற்றும் மகனையும் மனைவியையும் பறிகொடுத்த குடும்பத் தலைவனாக கிஷ்கிந்தா காண்டம் என நான்கு படங்கள் வெளியாகி, நான்கும் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் படமாக மாறியது.
வசூல் மன்னன்: இதில் கிஷ்கிந்தா காண்டம் படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 8 கோடிகள் மட்டும்தான். ஆனால் படம் தியேட்டரில் வசூல் செய்தது மட்டும் ரூபாய் 80 கோடிகளுக்கு மேல். இதுமட்டும் இல்லாமல் ஓடிடி பிசினஸ் என படத்தின் மொத்த வருவாய் என்பது தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தினை ஈட்டிக் கொடுத்துள்ளது. இதனால் மலையாள சினிமாவின் வசூல் மன்னனாக மாறியுள்ளார்.
சம்பளம் உயர்வு: ஒரே வருடத்தில் நான்கு படங்கள் ரிலீஸ், இந்த நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் தனது சம்பளத்தினை பெருமளவு உயர்த்திவிடாமல், தான் முன்பு வாங்கிக் கொண்டு இருந்ததை விட, கொஞ்சம் கூடுதலாக வாங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவரது படம் என்றால் படத்தின் பட்ஜெட்டினை தாராளமாக நம்பி உயர்த்தலாம் என்ற மனநிலைக்கு மலையாள தயாரிப்பாளர்கள் வந்துள்ளார்கள் எனவும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











