twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலத்தை வென்ற கிஷோர் குமார் பாடல்கள்- ஒரு தொகுப்பு

    By Shankar
    |

    கிஷோர் குமாரின் பாடல்களில் டாப் 10 பாடல்களை தொகுக்கலாம் என்று எடிட்டர் சொன்னபோது, நிஜமாகவே அது மிகப் பெரிய கஷ்டம் என்றுதான் தோன்றியது.

    காரணம் கிஷோர் குமார் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பாடலிலும் அவர் வெளிப்படுத்திய பாவங்கள், பாடிய முறைகளில் அவை சிறந்த பாடலாகத் திகழ்கின்றன. ஒரு நகைச்சுவையான பாடலைக் கூட அத்தனை சிறப்பாகப் பாடியிருப்பார் கிஷோர் குமார்.

    சோகப் பாடல்களில் அவர் குரல் உயிரை உருக்கும் என்றால், காதல் பாடல்களில் நாமே அதைப் பாடுவதைப் போன்றதொரு உற்சாகமும் புத்துணர்வும் தெரியும்.

    கிஷோர் குமாரின் பாடல்களிலிருந்து பத்துப் பாடல்களைத் தருகிறோம். இவற்றை நம்பர்கள் கொண்டு தரப்படுத்தவெல்லாம் முடியாது. பத்துப் பாடல்களுமே முத்துப் பாடல்கள்தான்..

    தேரே பினா ஜிந்தகி கி கோஹி...

    ஆந்தி படத்தில் ஆர்டி பர்மன் இசையில் கிஷோர் குமார் - லதா மங்கேஷ்கர் பாடிய மிக அற்புதமான பாடல். இந்தப் படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஒரு சர்ச்சை நிலவியதால், தடை செய்யப்பட்டது. இதே படத்தில் கிஷோர் குமார் - லதா பாடிய இன்னொரு பாடல் தும் ஆ கயே ஹோ... இதுவும் மிகப் பெரிய ஹிட் பாடல்.

    ஓ சாத்தி ரே...

    முகந்தர் கா சிக்கந்தர் படத்தில் இடம்பெற்ற காலத்தை வென்ற காவியப் பாடல் இது. கல்யாண்ஜி - ஆனந்த்ஜி இசையமைத்திருந்தனர். பாடலைக் கேட்கும்போதே கண்கள் நம்மையுமறியாமல் குளமாகிவிடும். அமிதாப்பின் நடிப்பும் கிஷோரின் குரலும் மனதை என்னமோ செய்யும்!

    ஹமே தும்ஸே ப்யார் கித்னா...

    இந்தப் பாடல் இடம்பெற்ற படம் குத்ரத். ஆர்டி பர்மன் இசையில் கிஷோர் குமார் பாடிய இந்தப் பாடல் காதலில் விழுந்த ஒவ்வொரு மனதையும் தளும்ப வைத்துவிடும். அதிலும் இந்தப் பாடலுக்கு தன் குரலை மிக மென்மையாக்கிக் கொண்டு பாடியிருப்பார் கிஷோர்குமார்.

    மேரே சப்னோ கி ராணி...

    நேபாளி குல்லா அணிந்தபடி ராஜேஷ் கன்னா வாயசைக்க, கிஷோர் குமார் பாடும் இந்த துள்ளல் பாடலைக் கேட்டால், துள்ளாத மனமும் துள்ளும். இடம்பெற்ற படம் ஆராதனா. இந்தப் படத்தின் வெற்றியில் பாடல்களின் பங்கு அதிகம். படத்துக்கு இசை எஸ்டி பர்மன்தான் என்றாலும், அவரது உடல்நிலை சரியில்லாததால், அவரது மகன் ஆர்டி பர்மன்தான் முழுமையாக இசையமைத்து முடித்தார்.

    பல் பல் தில் கே பாஸ்....

    ப்ளாக்மெயில் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மெல்லிசைப் பாடல்களின் முடிசூடா மன்னன் கிஷோக் குமார் என நிலைநாட்டிய பாடல். கல்யாண்ஜி - ஆனந்த்ஜி இசையில் 1973-ல் வெளிவந்தது. யுட்யூபில் 47 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துப் பரவசப்பட்ட பாடல்.

    ரிம் ஜிம் கிரே சாவன்...

    வெளியெங்கும் பருவ மழை
    அது மனசுக்குள் கிளப்புது நெருப்பை..

    மன்ஸில் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்கும்போது மனதுக்குள் தோன்றும் பரவசமும் கிளர்ச்சியும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பாடலின் இசையும் ஆர்டி பர்மன்தான்.

    சாகர் கினாரே..

    சாகர் படம்... எண்பதுகளில் கல்லூரிப் படிப்பை அல்லது பள்ளி இறுதியாண்டிலிருந்த ஒவ்வொருவரின் நினைவுகளையும் மீட்டும் இனிய பாடல்கள் நிறைந்த படம். அதிலும் இந்த சாகர் கினாரே... சான்ஸே இல்லை! இசா - ஆர்டி பர்மன்

    மே சோலா பரஸ்கி..

    சுபாஷ் கய் இயக்கிய கர்ஸ் படத்தில் இடம்பெற்ற அற்புதமான ஜோடிப் பாடல் இது. கிஷோர் குமாருடன் லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார். 1980ல் வெளியான இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் கேட்டாலும் அத்தனை புதிதாக இருக்கும். இசையமைத்தவர்கள் லட்சுமிகாந்த் ப்யாரிலால்.

    சல்தே சல்தே...

    கிஷோர் குமாரின் இணையற்ற பாடல்களில் ஒன்று சல்தே சல்தே. பப்பிலஹிரி இசையில் வெளியான பாடல் இது. எண்பதுகளில் வந்த இந்தப் பாடலை ஒரு பூவைக் தென்றல் தீண்டுவது போல, அத்தனை மென்மையாகப் பாடியிருப்பார் கிஷோர்.

    காதா ரஹே மேரா தில்...

    தேவ் ஆனந்த் - வஹிதா ரஹ்மான் நடித்த கைடு படத்தில் இடம்பெற்ற மிக பசுமையான காதல் பாடல் இது. எஸ்டி பர்மன் இசையமைத்திருந்தார். ஜோடிப் பாடல்களில் இணையற்றது இந்தப் பாடல்.

    English summary
    Kishore Kumar has left a treasure trove of his melodies that are cherished by the young and old alike even today. On his 85th birthday, we pay tribute to the man whose everlasting voice gave a song to every heart.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X