மும்பையில் கோச்சடையான் இந்தி ட்ரைலர்- பாடல்கள்.. ரஜினி முன்னிலையில் அமிதாப் வெளியிட்டார்!
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இந்தி ட்ரைலர் மற்றும் பாடல்களை நேற்று வெளியிட்டார் அமிதாப் பச்சன்.
சமீபத்தில் வெளியான 'கோச்சடையான்' தமிழ் - தெலுங்குப் பாடல்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழ் டிரைய்லரை இதுவரை 3.45 மில்லியன் பேரும், இந்தி ட்ரைலரை 8 லட்சம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.

சாதனை
இணைய உலகில் இது ஒரு புதிய சாதனையாகும். இதுவரை எந்த தமிழ்ப் படத்தின் ட்ரைலருக்கும் இப்படியொரு வரவேற்பு கிடைத்ததில்லை.

யு சான்று
தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட 'கோச்சடையான்' தமிழ் 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.

ரூ 125 கோடி
சுமார் 125 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய வேடமேற்றுள்ளனர்.
கதை திரைக்கதை வசனத்தை கே எஸ் ரவிக்குமார் எழுத, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

அமிதாப்
முதன் முதலாக இந்தியாவில் நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத்தில் வெளியாகும் படம் என்ற பெருமையுடன் வெளியாகும் கோச்சடையான் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தரத்தில் தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் இந்தி டிரெய்லரை பாலிவுட்டின் சாதனையாளர் அமிதாப் பச்சன் நேற்று வெளியிட்டார்.

மும்பையில்
மும்பை 'சினிமேக்ஸ்' வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனுபம் கெர், அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன், நடிகை கஜோல், லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











