கோச்சடையான் தமிழ், தெலுங்கில் சூப்பர்... வடக்கில் சரியாகப் போகவில்லை!- முரளி மனோகர்
சென்னை: ரஜியின் கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கில் சிறப்பான வரவேற்புடன் ஓடுவதாகவும், இந்தியில் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை என்றும் அதன் இணைத் தயாரிப்பாளரான முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் இந்தியில் போட்ட முதலீடு திரும்பக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கோச்சடையான்
கடந்த மே 23-ம் தேதி உலகெங்கும் வெளியானது ரஜினியின் கோச்சடையான். மோஷன் கேப்சரிங் என்ற புதிய தொழில்நுட்பத்தில் 3 டியில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் கோச்சடையான்தான்.

தமிழில்..
இந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறுகையில், "இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் மிகச் சிறப்பான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் படம் வெளியான சில தினங்கள் கழித்து, தியேட்டர்களை அதிகப்படுத்த வேண்டி வந்தது.

தெலுங்கில்...
தெலுங்கிலும் கோச்சடையானுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற தென்னிந்திய மாநிலங்களில் கோச்சடையான் பெரிய வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. கோச்சடையான் தமிழ் - தெலுங்குக்கு வெளிநாடுகளில் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

வடக்கில்தான்..
ஆனால் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். தென்னிந்திய மக்கள் புதிய தொழில்நுட்பத்தை, அந்த கதை சொன்ன விதத்தை மனசார ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வட இந்தியாவில் இன்னும் இந்த தொழில்நுட்பம் புரியவில்லை.

ஆனா போட்ட முதல் வந்துடும்...
ஆனாலும் இந்திப் பதிப்புக்காக நாங்கள் போட்ட முதல் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. வடக்கில் இன்னும் பல திரையரங்குகளில் கோச்சடையான் ஓடிக் கொண்டுள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











