கோச்சடையான் டிக்கெட் விலை மோசடி: தியேட்டர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை: கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியைக் கழிக்காமல் அதிக விலைக்கு டிக்கெட் விற்ற திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் எர்ணாவூரைச் சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12-ந்தேதி வணிக வரித்துறை அதிகாரிகள் அரசாணை பிறப்பித்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்," என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'கோச்சடையான் படத்துக்கு வரி விலக்கு அளித்தது சரிதான். எனவே, கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது," என்று கடந்த மாதம் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு மனுதாரரின் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி, "கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல், ஒரு சிலரைத் தவிர, தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கேளிக்கை வரியை வசூலித்து வருகின்றனர். இந்த கோர்ட்டின் உத்தரவினை அவர்கள் மதிக்கவில்லை," என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், 'இதுதொடர்பாக விரிவான மனுவைத் தாக்கல் செய்யுங்கள். திரையரங்குகள் கேளிக்கை வரியைக் கழிக்காமல் டிக்கெட்களை விற்றதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,' உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











