தடையை மீறி பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த விவகாரம்.. நடிகர்கள் விமல், சூரி மீது வழக்குப்பதிவு!
சென்னை: ஊரடங்கு தடையை மீறி பேரிஜம் எரியில் மீன் பிடித்த விவகாரத்தில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பக்கத்து மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட இபாஸ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு சென்றனர்
மேலும் சுற்றுலாத் தளங்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர்கள் விமல், சூரி மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிலர் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

மீன் பிடித்த நடிகர்கள்
மேலும் தடைவிதிக்கப்பட்டுள்ள பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்று மீன் பிடித்துள்ளனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து எழுந்த புகாரில் நடிகர்கள் விமல் மற்றும் சூரி ஆகியோர் பேரிஜம் ஏரிக்கு சென்றது உறுதி செய்யப்பட்டது.

பணியிடை நீக்கம்
இதனால் அவர்களுக்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நடிகர்களுக்கு உடந்தையாக இருந்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் வனத்துறை ஊழியர்கள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணை
இதையடுத்து நடிகர்கள் இ பாஸ் எடுத்து கொடைக்கானல் வந்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இ பாஸ் எடுக்காமல் கொடைக்கானல் வந்து சென்றது தெரியவந்தது.

வழக்குப்பதிவு
இதுதொடர்பாக கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவக்குமார், கொடைக்கானல் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து ஊரடங்கு சட்டத்தை மீறியது, நோய்த் தொற்று பரவகாரணமாக இருந்தது என இரு பிரிவுகளின் கீழ் நடிகர்கள் விமல் மற்றும் சூரி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











