"விஐபி" செண்டிமெண்ட்டை நம்பும் தனுஷ்.. ரம்ஜான் தினத்தில் 'கொடி'யை பறக்கவிட திட்டம்
சென்னை: வேலையில்லாப் பட்டதாரி, மாரி செண்டிமெண்ட் காரணமாக தனது கொடி படத்தை வருகின்ற ரம்ஜான் தினத்தில் வெளியிட நடிகர் தனுஷ் முடிவு செய்திருக்கிறாராம்.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் கொடி. இதில் முதன்முறையாக அரசியல்வாதி வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
வருகின்ற பிப்ரவரி மாதத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக முடித்து விட படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

கொடி
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக தனுஷின் தயாரிப்பில் 'கொடி'யை இயக்கி வருகிறார் இயக்குநர் துரை செந்தில்குமார். முதல் 2 படங்களிலும் சிவகார்த்திகேயனை இயக்கிய செந்தில்குமார் இந்தப் படத்தில் தனுஷை முதன்முறையாக இயக்குகிறார்.

முதன்முறையாக
தனுஷ் 2 வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி இருவரும் நடிக்கின்றனர்.இருவரும் தனுஷுடன் இணையும் முதல் படம் கொடி என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை, பொள்ளாச்சி
முதன்முறையாக தனுஷ் அரசியல்வாதியாகவும்,இரட்டை வேடங்களிலும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவை, பழனி,பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு-பகலாக நடந்து வருகிறது.

ரம்ஜான் தினத்தில்
இந்நிலையில் இப்படத்தை வருகின்ற ரம்ஜான் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே வெளியான தனுஷின் வேலையில்லாப் பட்டதாரி மற்றும் மாரி ஆகிய படங்கள் இதே ரம்ஜான் தினத்தில் தான் வெளியாகின.இதில் வேலையில்லாப் பட்டதாரி படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

செண்டிமெண்ட்
இதனால் ரம்ஜான் செண்டிமெண்டை நம்பும் தனுஷ் கொடி படத்திலும் அதனையே கடைபிடிக்க விரும்புகிறாராம். அதனால் கண்டிப்பாக ரம்ஜான் தினத்தில் தனுஷின் கொடி பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபு சாலமன்
தனுஷின் நடிப்பில் உருவான பிரபு சாலமன் படம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாமலே உள்ளது.இந்நிலையில் இன்னும் படப்பிடிப்பில் இருக்கும் கொடி படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











