ஒரே படத்தில் தன் இமேஜை மாற்றியவர்.. ‘அருந்ததி’ பட இயக்குநருக்கு அனுஷ்கா நேரில் அஞ்சலி
இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா உடலுக்கு நடிகை அனுஷ்கா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஹைதராபாத்: இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகை அனுஷ்கா.
அருந்ததி, அம்மன் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். சுமார் 37 ஆண்டுகள் தெலுங்கு திரை உலகில் கொடிகட்டிப் பறந்த கோடி ராமகிருஷ்ணா சுமார் 202 படங்களை இயக்கியுள்ளார். இந்த வெற்றி இயக்குநரின் மறைவையொட்டி தெலுங்கு திரையுலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

அவரின் மரண செய்தி அறிந்த தெலுங்கு திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை நேரிலும், சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.
கோடி ராமகிருஷ்ணா இயக்கிய அருந்ததி படம் மூலம் தான் அனுஷ்காவுக்கு பேரும், புகழும் கிடைத்தது. அப்பட வெற்றியைத் தொடர்ந்து தான், அவர் தமிழிலும், தெலுங்கிலும் தனி நாயகியாகவும், முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும் இடம் பிடித்தார்.
இந்நிலையில் சினிமாவில் தனக்கு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவின் மரணச் செய்தி கேட்டு அனுஷ்கா பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அவரது உடலுக்கு அனுஷ்கா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கோடி ராமகிருஷ்ணா உடலைப் பார்த்து அவர் கண்ணீர் சிந்தி அழுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதே போல், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்களும் கோடி ராமகிருஷ்ணா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கோடி ராமகிருஷ்ணா படங்களை இயக்கியதோடு வெற்றிகரமான நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











