முந்திய ஜோதிகா... பின்வாங்கிய நயன்தாரா... லேடி சூப்பர் ஸ்டாருக்கு அடி மேல் அடியாக இருக்கே..!
கொலையுதிர் காலம் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.
Recommended Video
சென்னை: நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் என தெரிகிறது.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. அவரது மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.
மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களின் வெற்றியால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். அப்படி அவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் கொலையுதிர் காலம்.

பிரச்சினை:
கமல் நடித்த உன்னை போல் ஒருவன், அஜித்தின் பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி தான் இப்படத்தின் இயக்குனர். இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை தான். இப்படத்தை முதலில் ஜனவரி மாதம் வெளியிடுவதாக இருந்தது. அப்போது விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்கள் ரிலீசானதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தாமதமான ரிலீஸ்:
பின்னர் பிப்ரவரி, மே என ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. கொலையுதிர் காலம் படத்தின் மீதான வழக்கு தான் இந்த தேதி மாற்றத்துக்கு காரணம். ஜூன் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. ஒருவழியாக வழக்கு விசாரணைகளை எல்லாம் முடித்து, ஜூலை 26ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் ரிலீசாகவில்லை. அடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி என்றார்கள். பின்னர் ஆகஸ்ட் 2ம் தேதி என அதை மாற்றினார்கள்.

7 முறை மாற்றம்:
இப்படியாக ஏழு முறை ரிலீஸ் தேதியை மாற்றிய பிறகு கொலையுதிர் காலம் இன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது சிக்கல் நீடிக்கிறது. சென்னையில் எந்த தியேட்டரிலும், கொலையுதிர் காலம் படத்திற்கு இதுவரை முன்பதிவு தொடங்கவில்லை. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வலைதளங்களிலும் கொலையுதிர் காலம் படம் பட்டியலிடப்படவில்லை. எனவே அப்படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் தொடர்வதாகவே தெரிகிறது.

நயனுக்கே இப்படியா?
கொலையுதிர் காலம் படத்தின் இந்தி ரீமேக் சில மாதங்களுக்கு முன்பு ரிலீசானது. அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அதனால் தமிழ் பதிப்பை வாங்க யாரும் முன்வரவில்லை என்றே தெரிகிறது. முன்னணி நடிகையாக உள்ள, அதுவும் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாராவின் படத்திற்கே இந்த நிலையா என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதை மாற்றிக்கொண்டே இருப்பது நயன்தாராவின் இமேஜை பாதிப்பதாக உள்ளது.

ஜாக்பாட்:
ஜோதிகாவின் ஜாக்பாட் திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று ரிலீசாகியுள்ளது. முன்னதாக நயனின் படமும் இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், வசூலில் யார் முந்துகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நயன் படம் தற்போது ரிலீசாகவில்லை. இதனால் நயன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, ஜோதிகா பட வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











