லட்ச ரூபாய் பெற்றாலும் மற்றவர்களுக்காக செலவு செய்த குணம்.. மயில்சாமியை பாராட்டும் திரையுலகினர்!
சென்னை : நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமியின் உடலுக்கு நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மயில்சாமிக்கு சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் மயில்சாமியின் உடல் வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட உள்ளது.

நடிகர் மயில்சாமி
நடிகர் மயில்சாமி தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி மற்றும் குணசித்திர நடிகராக இருந்தவர். ஏராளமான படங்களில் நடித்துள்ளவர். நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக மயில்சாமி உயிரிழந்த நிலையில், அவருக்கு தமிழ் திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாரடைப்பால் உயிரிழப்பு
நேற்று முந்தைய தினம் மகாசிவராத்திரியையொட்டி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் இரவு வழிபாட்டில் பங்கேற்ற மயில்சாமி, அதிகாலை 3.30 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பசிப்பதாக கூறி 4 மணியளவில் இட்லி சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து நெஞ்சு வலிப்பதாக அவர் கூறிய நிலையில், அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்த் அஞ்சலி
இதையடுத்து அவரது உடலை சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்தினர் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து அவரது மறைவிற்கு திரையுலகமே ஒட்டுமொத்தமாக கூடி அஞ்சலி செலுத்தி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்றைய தினம் தகனம்
இந்நிலையில், இன்றைய தினம் வடபழனி ஏவிஎம் சுடுகாட்டில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, மயில்சாமி குறித்த பல விஷயங்களை பிரபலங்கள் தங்களது அஞ்சலியின்போது கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.

மயில்சாமியின் நல்ல குணநலன்கள்
நடிகர் மயில்சாமி, மற்றவர்களுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். அவர் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கினாலும் மற்றவர்களுக்கு உதவி செய்தது போக மீதம் 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே வீட்டிற்கு எடுத்து செல்வாராம். மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது எந்தவிதமான யோசனையும் இல்லாமல் அவர் செய்துவிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











