மணமக்களுக்கு வித்தியாசமான பரிசளித்த நடிகர் மயில்சாமி… வைரலாகும் புகைப்படம் !
சென்னை : தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி.
இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு வித்தியாசமான பரிசை அளித்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

மயில்சாமி
தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தவர் மயில்சாமி. அந்த திரைப்படத்தை அடுத்து, கன்னி ராசி திரைப்படத்தில் மளிகை பொருட்களை டெலிவரிசெய்யும் பாயாக வந்திருப்பார். இப்படி சிறிய சிறிய கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் மயில்சாமி.

நகைச்சுவையில்
குணசித்திரம், நகைச்சுவை என அனைத்திலும் மிரட்டி வரும் மயில் சாமி நான் அவனில்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் சிறப்பாக நடித்து புகழின் உச்சம் தொட்டார்.

சென்னை வெள்ளம்
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக உள்ளார் நடிகர் மயில்சாமி. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.

முறுங்கைக்காய் சிப்ஸ்
மயில்சாமி கடைசியாக விஜே பாலாஜி இயக்கி உருவான நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது முறுங்கைக்காய் சிப்ஸ் மற்றும் இடியட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சுயேச்சையாக
ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு வரை அ.தி.மு.கவில் இருந்த நடிகர் மயில்சாமி, ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.கவிலிருந்து ஒதுங்கி அமைதியாக இருந்தார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.

1,435 வாக்குகள்
தி.மு.க சார்பாக ஏ.எம்.வி.பிரபாகர் ராஜாவும், அ.தி.மு.க சார்பாகப் விருகை ரவியும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக சினேகன் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் 1,435 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.

மணமக்களுக்கு பரிசு
அண்மையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மயில்சாமி, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மயில்சாமி இவ்வாறு செய்துள்ளார். இது திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விலை குறைப்பு
இதுகுறித்து, கூறிய நடிகர் மயில்சாமி, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன் என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











