தேர்தல் முடிவுகள்.. கோலிவுட் மகிழ்ச்சி.. ஆனா கொண்டாட முடியாதே!!
இதற்கு முன்பு வரை இல்லாத ஆவலுடன் இந்த தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருந்தது தமிழ் சினிமா உலகம்.
அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்தது தமிழக அரசியல் களம். பொதுவாக தேர்தல் என்று வந்தால், முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டுவது வழக்கம்.
இந்த முறை வெளிப்படையாக ஆதரவைத் தெரிவிக்காவிட்டாலும், பலரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியைச் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை உணர்த்தினர்.
நடிகர் ரஜினியை அவர் வீட்டுக்கே போய்ச் சந்தித்தார் நரேந்திர மோடி. பதிலுக்கு, மோடி சிறந்த நிர்வாகி என்று சான்று கொடுத்துவிட்டார் ரஜினி.
நடிகர் விஜய்யோ, கோயமுத்தூருக்குப்போய் அங்கே தங்கிருந்த மோடியைச் சந்தித்தார். இந்த சந்திப்பு எதற்காக என்று அத்தனைப் பேருக்கும் தெரியும். ஆனால், சும்மா சினிமா பத்திப் பேசினோம் என்று கூறிவிட்டு வந்தார். மோடி பிரதமராவது மற்ற யாரையும் விட விஜய்க்குதான் ரொம்ப அவசியமாக இருந்தது. அவர் நிலை அப்படி.
வடிவேலு பெங்களூர் போய் மோடியைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டு வந்தார்.
இன்னும் நிறையபேர், வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும், பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என வேண்டிக் கொண்டிருந்தார்கள்.
இப்போது அது நடந்துவிட்டதால் உற்சாகத்திலிருக்கிறார்கள். ஆனாலும் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்வது அதிமுகதான் என்பதால், இவர்கள் ஆதரவை மறைமுகமாகக் காட்டியதுபோல, சந்தோஷத்தையும் மறைவாகத்தான் கொண்டாட முடியும்!


Click it and Unblock the Notifications











