பிப்ரவரி முதல் வாரத்தில் அடுத்தடுத்த பரபரப்பு.. ரெடியாகும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.
இதேபோல அஜித், சிம்பு, தனுஷ் படங்களின் அடுத்தடுத்த அறிவிப்புகளும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த நிலையில், இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோலிவுட் ஹீரோக்கள்
கோலிவுட்டில் முக்கியமான ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

ஷாருக்கானின் பதான்
இந்தப் படங்களை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாருக்கானின் பதான் படமும் வெளியாகி சர்வதேச அளவில் சில தினங்களிலேயே 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. தொடர்ந்து தமிழில் பிகினிங், மெய்ப்பட செய், மாளிகபுரம் போன்ற படங்களும் ஹாஸ்டல், அயலி உள்ளிட்ட வெப் தொடர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

அடுத்தடுத்த அறிவிப்புகள்
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. அடுத்ததாக விஜய்யின் தளபதி 67 படத்தின் அறிவிப்பு டீசர் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் அறிவிப்பு மற்றும் பூஜையின் புகைப்படங்களும் வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் ஏகே62 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்புவின் பத்து தல படம்
தொடர்ந்து நடிகர் சிம்புவின் பத்து தல படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து விரைவில் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தனுஷின் வாத்தி படம்
இதனிடையே நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் இசை வெளியீடும் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இசை வெளியீடு நடக்கவுள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











