கோலாகலமாக நடந்த ஷங்கர் மகளின் திருமணம்.. திரண்டு வந்து வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த, இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இன்று இரண்டாம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தில் ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களின் புகைப்படம் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவரது இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமாவின் மீது இருந்த ஆசையால் விருமன் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தது மட்டுமில்லாமல், மதுர வீரன் அழகுல என பாட்டுப்பாடி தனக்கு பாடவும் தெரியும் என்பதை நிரூபித்தார். தற்போது இவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஷங்கர்: ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதத்திலேயே ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ரோஹித்துடன் சேர்ந்து வாழவில்லை. சில பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா அவரை விட்டு பிரிந்தார். மகளின் வாழ்க்கை இப்படியானதை நினைத்து வருத்தப்பட்ட ஷங்கர், ரோகித்திடம் தனது மகளுக்கு முறையாக விவாகரத்தை பெற்றார்.

ஐஸ்வர்யா சங்கர்: இதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்த ஷங்கர், தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் மருமகனாக்கி உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்ற நிலையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாடாளுமன்றத் தேர்தல் 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் பிஸியாக இருக்கும் இவர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

வாழ்த்திய பிரபலங்கள்: மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து அலுத்துப்போய் விட்டார்கள். ராம் சரணின் பிறந்தநாளான மார்ச் 27ந் தேதி கேம் சேஞ்சர் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதில் தாத்தாவின் இரண்டு விதமான கெட்டப்புகள் இந்த போஸ்டரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











