சண்முக பாண்டியனின் கொம்புசீவி எப்படி இருக்கு?.. பப்ளிக் விமர்சனம் இதுதான்.. விஜயகாந்த் மாதிரி வருவாரா?
சென்னை: பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தார்ணிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கொம்புசீவி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் இன்று பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகியிருக்கிறது. இந்த வருடத்தில் சண்முக பாண்டியனின் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியனும் தனது தந்தை மாதிரியே சினிமாவில் பிரதான கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் படைத்தலைவன் படம் வெளியானது. அதன் ட்ரெய்லர் எல்லாம் ஓரளவுக்கு கவனத்தை பெற்றதால்; ரசிகர்களும் படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்றார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாததால் தோல்விதான் கிடைத்தது.
கொம்புசீவி: அந்தப் படத்துக்கு பிறகு பொன்ராம் இயக்கத்தில் கொம்புசீவி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் சரத்குமாரும் நடித்திருக்கிறார். தார்ணிகா என்பவர் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில்; விஜயகாந்த் மகனுக்கு பெரிய வெற்றியை கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார் பொன்ராம்.

இன்று ரிலீஸான படம்: சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் பொன்ராமும் ஒருவர் என்பதால் அதேபோல் சண்முக பாண்டியனுக்கும் இருப்பாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்திருக்கிறது. இப்படி ஏகப்பட்ட ஹைப்புகளோடு இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது. தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் ஆர்வத்தோடு படம் பார்க்க முதல் நாள் முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள்.
மக்கள் விமர்சனம்: படம் பார்த்த ரசிகர்களும், ரசிகைகளும் தங்களது விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு பேசிய ரசிகர் ஒருவர், "படம் நன்றாக இருக்கிறது. சரத்குமாருடன் சேர்ந்து சண்முக பாண்டியனும் நன்றாகவே செய்திருக்கிறார். உண்மை கதையை எடுத்து திரைக்கதையை சூப்பராக அமைத்திருக்கிறார் பொன்ராம். இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார். ப்ளஸ்ஸும், மைனஸும் இருக்கிறது. ப்ளஸ் அதிகமாக இருக்கிறது. விஜயகாந்த் சிம்ப்டம்ஸ் இருந்தாலும் சண்முக பாண்டியன் தனித்துவமாக தெரிகிறார்" என்றார்.
ரசிகையின் விமர்சனம்: அவரை தொடர்ந்து பேசிய ரசிகை ஒருவர், "காமெடி, சென்ட்டிமென்ட் எல்லாம் கலந்து ஒரு ஃபேமிலி படமாக இருக்கிறது. சண்டையெல்லாம் ரொம்ப இல்லை. சண்முக பாண்டியனை பார்க்கையில் விஜயகாந்த்தை பார்க்கும்படியாக இருக்கிறது. இடைவேளை காட்சி நன்றாக இருந்தது. க்ளைமேக்ஸுக்கு முன்பு வரும் காமெடி, க்ளைமேக்ஸ் நன்றாக இருந்தது" என்றார். மேலும் பேசிய இன்னொரு ரசிகை, "படத்தில் எல்லா சீன்களும் நன்றாக இருந்தன. எனக்கு விஜயகாந்த்தையும் பிடிக்கும் அவரது மகனையும் பிடிக்கும். படம் ரொம்பவே பிடித்திருக்கிறது" என்றார். இவர்கள் மட்டுமின்றி படம் பார்த்த பலரும் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்திருப்பதால் படக்குழு உச்சக்கட்ட ஹேப்பியில் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி சண்முக பாண்டியனின் நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதால் கண்டிப்பாக விஜயகாந்த் மாதிரி வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











