Koose Munisamy Review: கூச முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ் எப்படி இருக்கு.. ரசிகர்கள் விமர்சனம் இதோ!
சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை மையமாக வைத்து சில படங்களும் வெப்சீரிஸ்களும் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த முறை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருப்பது பக்காவான டாக்குமென்ட்ரி படம். வீரப்பன் பேசும் வீடியோ காட்சிகள் மற்றும் அவரது பார்வையில் உள்ள விஷயங்கள் என வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமே வீரப்பன் கதையை உல்டா செய்து மறைமுகமாக கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ள அரசியல் படம் தான் என்கிற விமர்சனங்களும் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், கூச முனுசாமி எனும் வெப்சீரிஸ் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் அது பற்றிய விமர்சனங்கள் மற்றும் விவாதங்களை ஆரம்பித்துள்ளனர். அதுதொடர்பான விஷயங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

கூச முனுசாமி விமர்சனம்: ''கூஸ் முனுசாமி வீரப்பன்'' Zee5 ல், வீரப்பன் பற்றிய நல்ல ஆவணப்படம். இதுவரை வெளியான எல்லா வீரப்பன் கதைகளும் கடைசியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஹன்ட் ஃபார் வீரப்பன் வரை எல்லாமே காவல்துறை நமக்கு சொன்ன கதைகள்தான்.
ஆனால் இது எதிர்நிலையிலிருந்து மக்களின் பார்வையிலிருந்து வீரப்பன் பார்வையிலிருந்து சொல்லப்படுகிறது. அதனாலேயே காவல்துறையின் அதிரடிப்படையின் அடக்குமுறைகள் எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்பதை உணரமுடிந்தது.
பல சம்பவங்களை நடிகர்களை கொண்டு நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அது அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக நான்காவது எபிசோடில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டை என்கிற பெயரில் வொர்க்ஷாப்கள் வைத்து அப்பாவி மக்கள் மீது நடத்திய கொடுமைகளையும் இன்றுவரை கிடைத்திடாத நீதியையும் இந்த ஆவணத்தொடர் ஆதாரங்களோடு பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களோடு பதிவு செய்திருந்தது முக்கியமானது. இளகிய மனம் படைத்தோர் அந்த எபிசோடை தவிர்த்துவிடலாம்... அவ்வளவு தாக்கம்!
தற்போதைய ஆட்சியிலாவது இந்த அநீதிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கிடைக்கவேண்டும்.
காவல்துறையின் அட்டுழியங்களை மட்டுமல்லாது வீரப்பனின் கொடூரக் கொலைகளையும் சொல்லத்தவறுவதில்லை. வீரப்பனின் அரசியல் ஆர்வத்தையும் பூலான்தேவி போல தன்னை நினைத்துக்கொண்டு தானும் அரசியலில் ஒரு சுற்று வரலாம் என்கிற ஆவலையும் தெரிந்துகொள்ள முடிகிறது. சரண்டர் ஆகவும், பொதுமன்னிப்புக்காகவும் வீரப்பன் காத்திருந்ததும் ஆனால் அந்த ஆசை பலமுறை அதிரடிப்படையினரால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.
வீரப்பன் வடிவேலு போன்ற ஒரு நல்ல பர்ஃபார்மராகவும் இருக்கிறார். அவருடைய கதை சொல்லும் ஆற்றலும் நடிக்கும் திறனும் ஆச்சர்யப்படுத்தியது. நடிப்புத்துறைக்குள் வந்திருக்கலாம்!
எடிட்டிங், சவுன்ட் டிசைன், இசை என டெக்னிக்கலாகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. குழுவினருக்கு வாழ்த்துகள்.
இந்த ஆவணப்படத்தில் இருந்த ஒரே நெருடல், இதில் சீமான் ஏன் பேசுகிறார் என்பதுதான். அவருக்கும் வீரப்பனுக்கும் என்ன தொடர்பு எனத்தெரியவில்லை." என ஆதிஷா என்பவர் விமர்சித்துள்ளார்.
அந்த கொடூரத்தை பார்க்க முடியல: கூச முனுசாமி ஆவணப் படத்தை ஆர்வத்துடன் பார்த்தேன். ஆனால், சில எபிசோடுகளில் போலீஸார் ஒன்றுமே தெரியாத அப்பாவி ஊர் மக்களுக்கு கொடுக்கும் சித்ரவதை காட்சிகளை பார்க்கும் போது அதற்கு பின் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு மனம் ரணமாகி விட்டது என இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
அரசியல் பிரச்சனை: வீரப்பனின் கதையில் ஏகப்பட்ட அரசியல் பிரச்சனை இருந்த நிலையில், இந்த ஆவணப்படமும் வீரப்பன் பேசிய வீடியோ காட்சிகளும் வெளியாக இத்தனை ஆண்டுகள் ஆனதா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆவணப்படத்திலும் ஏகப்பட்ட அரசியல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களை தோலுரித்துக் காட்டியிருக்கும் நிலையில் பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.


Click it and Unblock the Notifications