நாசர், விஜய்சேதுபதி, விமல், விதார்த்.. ந.முத்துச்சாமியின் ‘கூத்துப்பட்டறை’ தந்த நாயகர்கள்!
கூத்துப்பட்டறை மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகர்கள் ஏராளம்.
Recommended Video

சென்னை: நாசர், விஜய் சேதுபதி, விதார்த், சண்முகராஜன் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் பலர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் தான்.
தமிழ் சினிமாவிற்கு பல ஈடுஇணையற்ற நடிகர்களை உருவாக்கித் தந்த கூத்துப்பட்டறை ந.முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82.
தஞ்சாவூர் அருகே உள்ள புஞ்சை எனும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்த ந.முத்துசாமி, நாடகக்கலையின் மீதும் நடிப்புக்கலையின் மீதும் கொண்ட தீராக்காதலால் கூத்துப்பட்டறை எனும் அமைப்பைத் தொடங்கினார்.

கூத்துப்பட்டறை மாணவர்கள் :
அவரது கூத்துப்பட்டறையில் இருந்து வெளிவந்தவர்கள் தான் நாசர், தலைவாசல் விஜய், சண்முகராஜன், குரு சோமசுந்தரம், விமல், விதார்த், கலைராணி, பசுபதி போன்றோர். மிக இயல்பாக நடிப்பை வெளிப்படுத்துவது எப்படி என்பதே ந.முத்துச்சாமி தனது மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்த மிகச்சிறந்த பாடம். ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரத்திற்கு தகுந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்துவதில் பெயர் போனவர்கள் இவரது மாணவர்கள்.

விஜய்சேதுபதியின் குரு:
கூத்துப்பட்டறையில் அக்கவுண்டண்டாக இருந்த விஜய்சேதுபதியை நடிகராக்கிய பெருமைக்குரியவர் முத்துச்சாமி. ஆண்டவன் கட்டளை படத்தில் நாசர் நடித்திருந்தது முத்துச்சாமி கதாபாத்திரத்தில் தான். தன்னால் ஒவ்வொரு படத்திலும் கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட முடிவது முத்துச்சாமியின் கூத்துப்பட்டறைப் பயிற்சியால் தான் என்பதை பலமுறை விஜய் சேதுபதியே சொல்லி இருக்கிறார்.

குரு சோமசுந்தரம்:
இதேபோல், ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரமும் கூத்துப்பட்டறை மாணவர் தான். கூத்துப்பட்டறையில் 9 வருடம் இருந்த இவர், பல நடிகர்களுக்கு நடிப்பும் சொல்லிக் கொடுத்தவர். அவர்களில் முக்கியமானவர் வில்லன் மற்றும் கதாநாயகன் என எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் ஸ்கோர் செய்யும் பாபி சிம்ஹா.

கலைராணி:
நடிகர் விமல் மற்றும் விதார்த்தும் கூத்துப்பட்டறையில் முத்துசாமியிடம் பயின்றவர்கள் தான். இவர்களும் இயல்பான நடிப்பிற்கு பேர் போனவர்கள். நடிகை கலைராணியும் முத்துச்சாமியின் மாணவர்களில் முக்கியமானவர். அவர் நடிப்போடு பல இடங்களில் நடிப்பதற்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

ஒரு சோறு பதம்:
இவர்கள் மட்டுமல்ல கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். மேற்கூறியவர்கள் எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தான். சத்தமின்றி பல சாதனையாளர்களை உருவாக்கி கலைக்கு பெருமையும் புகழையும் சேர்த்த முத்துசாமி, பத்மஸ்ரீ முதலான விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











